கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோயில் 10-வது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள் கடந்த வாரம் மர்ம நபர்கள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். இதேபோன்று தேனிமலை மற்றும் போளூர் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையங்களில் இயந்திரங்களை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
மேலும், கலசபாக்கம் பகுதியில் உள்ள இந்தியா ஒன் ஏடிஎம் மையத்திலும் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ஒரே இரவில் 4 ஏடிஎம் மையங்களிலும் 80 லட்சம் ரூபாய் வரை கொள்ளை போனதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கிச் செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
கொள்ளையர்கள் தங்கள் கைரேகை மற்றும் வீடியோ பதிவை காவல்துறையினர் கண்டுபிடிக்காமல் இருக்க ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்து சென்றனர். அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளை அடித்து பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எறித்துச் சென்றனர். இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின.
இதனையடுத்து வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து கொள்ளையில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் வேலூர் வழியாக, ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ காரை கொள்ளையர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லைகளிலும் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கி ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கும்பல் ஆந்திரா வழியாக கர்நாடக மாநிலம் சென்று அங்கு கேஜிஎப் பகுதியில் தங்கி இருந்து பின்னர் தப்பிச் சென்றுள்ளனர். இதற்கு உதவியாக இருந்த நபரை அடையாளம் கண்டு தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டதை அடுத்து மேலும் 5 தனிப்படைகள் ஹரியானா மாநிலம் விரைந்தது.
இதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான, கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிப்பை கர்நாடகாவில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஏடிஎஸ்பி விக்னேஸ்வர்யா மற்றும் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா கொண்ட குழுவினர் கைது செய்தனர். முகமது ஆரிப்பிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்று மேலும் புதிதாக ஆஜாத் கான் எனபவரை ஹரியானா மாநில போலீசாரின் உதவியுடன், தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் கொள்ளையர்கள் இருவரும் விமானம் மூலம் நேற்றிரவு சென்னை அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, சாலை மார்க்கமாக திருவண்ணாமலைக்கு அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் இருவரும் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி தெய்வீகன் இல்லத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு கொள்ளையர்களையும் மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தெய்வீகன் உத்தரவிட்டார். இதையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












