உடல்நிலை சரியில்லாத நிலையிலும், நாடாளுமன்றத்திற்கு சென்று டெல்லி நிர்வாக மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி அரசு உயர் அதிகாரிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யும் அதிகாரத்தை துணைநிலை ஆளுநருக்கு வழங்கும் மசோதாவுக்கு முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லி அரசு உயர் அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மசோதா மாநிலங்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து பேசினர். 6 மணி நேர விவாதத்துக்குப் பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
தேசிய தலைநகரில், மாநில அரசை விட மத்திய அரசுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த மசோதாவுக்கு ஆதரவாக 132 உறுப்பினர்களும், எதிராக 102 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து, 29 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் சிறப்பு என்னவென்றால், முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவர்ககளுள் ஒருவருமான மன்மோகன் சிங்கும் வாக்கெடுப்பில் பங்கேற்க வந்திருந்தார். 90 வயதான மன்மோகன் சிங் உடல்நிலை சரியில்லாத நிலையிலும், நேற்று சக்கர நாற்காலியில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து, டெல்லி அவசர சட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்தார்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதி உள்ள அந்த கடிதத்தில், தங்களுக்கு உடல்நலக்குறைவு இருந்த போதிலும், டெல்லி மக்களின் நலன் கருதி மாநிலங்களவைக்கு வருகை தந்து டெல்லி நிர்வாக மசோதாவிற்கு எதிராக வாக்களிக்க வந்தீர்கள். டெல்லி மக்கள் சார்பாக உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றிகளையும்தெரிவித்துக் கொள்கிறேன்.
உடல்நலக்குறைவு பிரச்னை இருந்தபோதிலும், எதை பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் அவைக்கு வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தது மிகப்பெரிய பக்கபலமாக உணர வைத்தது. நீங்கள் எங்கள் பக்கத்தில் இருப்பது, இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக நின்று பாதுகாக்க உந்துதலாக உள்ளது. உங்கள் அமைதி, கருணை மற்றும் நம்பிக்கையை அது மேலும் வலுப்படுத்தியுள்ளது. மாநிலங்களவையில் உங்கள் வருகை இந்திய ஜனநாயகத்தை பலவீனப்படுத்த நினைக்கும் அனைத்து சக்திகளுக்கும் தெளிவான செய்தியை அளித்துள்ளது.
உங்கள் அர்ப்பணிப்பு அனைவருக்கும் ஊக்கமளிக்கும்;
மேலும், இந்த வயதிலும் நீங்கள் எடுத்துள்ள இந்த முயற்சியை அரசியல் தலைவர்கள் வயது மற்றும் கட்சி வேறுபாடுகளை மீறி பாராட்டுவார்கள் என்று கூறியுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நமது அரசியலமைப்பின் கொள்கைகளுக்கான உங்கள் உறுதியான அர்ப்பணிப்பு பல சகாப்தங்களாக நினைவுகூரப்படும் மற்றும் வரவிருக்கும் தலைமுறை நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆழமாக ஊக்குவிக்கும். டெல்லி குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நாங்கள் ஒரு புதிய கட்டத்தில் இருக்கிறோம். எனவே அரசியலமைப்பை குறைந்த மதிப்பிற்கு உட்படுத்தும் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் தொடர்ச்சியான ஆதரவையும் வழிகாட்டுதலையும் எதிர்நோக்குகிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இதேபோல் மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எம்பி ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சரத் பவார், ஹேமந்த் சோரன், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோருக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா











