கிருஷ்ணகிரி மாவட்டம் ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வால்விலிருந்து வெளியேறும் நீரால் தொடர்ந்து ஏற்படும் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் வால்வு போச்சம்பள்ளி அடுத்த அங்கம்பட்டி சந்திப்பு சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பராமரிப்பு பணிக்காக வால்விலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதன்மூலம் வெளியேற்றப்படும் நீரானது ஆறாக பெருக்கெடுத்து தருமபுரி- திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓடுகிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை வழக்கப்போல் பராமரிப்பு பணிக்காக வால்விலிருந்து தண்ணீர் வெளியேறியது. அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் திடீரென தண்ணீர் இருப்பதை அறியாமல் சறுக்கி கீழே விழுந்தனர்.
இதை அடுத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூரு ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் விடுவதை தடுத்து, தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிகை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ம. ஸ்ரீ மரகதம்








