சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளையில் கொள்ளையடிக்கப்பட்ட நகை முழுவதும் மீட்கப்பட்டு விட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, வங்கி கிளை காவலாளி மற்றும் மேலாளர், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இந்த கொள்ளை அரங்கேறியது தெரியவந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வங்கியின் முன்னாள் ஊழியரான முருகன் என்பவர் இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை குற்றவாளிகள் என நிர்ணயித்து தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். வங்கி ஊழியர் முருகன், அவரது கூட்டாளிகள் தற்போது கைதாகி உள்ள பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் மற்றும் தலைமறைவாக உள்ள சூர்யா மேலும் ஒருவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொள்ளை வழக்கில் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு முக்கிய குற்றவாளியான முருகன் சென்னையை அடுத்த கொரட்டூர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கி கொள்ளையில் 32 கிலோ தங்க நகையில் 18 கிலோ மீட்கப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள 14 கிலோ தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் முழுவதுமாக மீட்கப்பட்டுவிட்டதாக காவல்துறை விளக்கமளித்துள்ளது.