எதிர்க்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கைக்கு மட்டுமே காவல்துறை பயன்படுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பல்லவன் சாலையில் அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் திமுக அரசைக் கண்டித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோகுல இந்திரா, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியர்கள் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரனுக்கு அதிமுகவை பற்றி பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றார். ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமென்பது கட்டாயம் இல்லை என விளக்கமளித்த அவர், அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறைக்கு பொற் காலமாக இருந்தது என கூறினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி மற்றும் பணப்பலன்களை உடனே வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். போக்குவரத்து நிலைக்குழுவில் அண்ணா தொழிற்சங்க பேரவையை சேர்க்காமல் அரசாணை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது என கூறினார்.
இன்று திமுக ஆட்சியில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமார், எதிர்க்கட்சிகளை பழி வாங்குவதற்காக மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறதே தவிர காவல்துறை தற்போது சுதந்திரமாக செயல்படவில்லை என்றார். மத்திய அரசுக்கு இணங்கி செல்வதைத்தான் ஆளும் திமுக அரசு செய்து கொண்டிருக்கிறது என்ற அவர், எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் கப்பன் சாஸ்திரம் போன்று செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்







