பீகார் முதல் முதலமைச்சர் ஸ்ரீகிருஷ்ண சிங்கின் 139-வது பிறந்தநாள் விழா பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கார்கே, SIR முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைப்போம் என்றார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் “மோடி எங்கும் போக மாட்டார்” என கூற, அதற்கு பதிலளித்த கார்கே, “மோடியின் அப்பாவும் போவார் என்று கூறியது பெரும் சர்ச்சையானது.
இந்த கருத்து “அவமதிப்புக்குரியது, அநாகரிகமானது, தரக்குறைவானது” என்று பாஜக கடுமையாக கண்டித்துள்ளது. இதுவரை ரவுடிகள், குண்டர்கள் பயன்படுத்திய மொழியை இப்போது காங்கிரஸ் தலைவரே பயன்படுத்துகிறார். காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சி போல் இல்லாமல் மாஃபியா கும்பல் போல் செயல்படுகிறது என்று பாஜக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
இதனை கண்டித்து இன்று நாடு முழுவதும் உள்ள மாநில தலைமையகங்களில் போராட்டம் நடத்த பாஜக அறிவிப்பு வெளியிட்டது. டெல்லியில் பாஜக தொண்டர்கள் கார்கேவின் இல்லம் நோக்கி பேரணி நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கார்கே நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில், காங்கிரஸ் தரப்பில், பாஜக தொண்டர் ஒருவர் முதலில் கார்கேவின் தந்தையை இழிவுபடுத்தியதால் தான், மோடியின் கருத்தியல் தந்தையான ஆர்எஸ்எஸ்-ஐ குறிப்பிட்டு கார்கே பதிலளித்தார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




