தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? – நீதிபதிகள் கேள்வி

இந்தியா முழுவதிலும் இருந்து தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராமநாதபுரம் பகுதியைச்…

இந்தியா முழுவதிலும் இருந்து தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என ராமேஸ்வரம் கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மார்க்கண்டேயன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ராமேஸ்வரம் பகுதியில், உள்ளே மற்றும் வெளியே 64 தீர்த்தங்கள் உள்ளது. இதில், அக்னி தீர்த்தம் கோயிலின் வெளியே உள்ள கடல் பகுதியை குறிக்கும். ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தத்தில் குளிப்பதற்காக இந்தியா முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

ராமேஸ்வரம் கோயில் அருகே உள்ள அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால், ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை அமைக்க ரூ.52.60 கோடி ஒதுக்கப்பட்டது. 7 வருடங்கள் ஆகியும் இதுவரை 50% பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. தற்போது இப்பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது.

இது குறித்து பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ராமேஸ்வரம் கோயில் அருகே உள்ள அக்னி தீர்த்தம் கடல் பகுதியில் சாக்கடைகள், குப்பைகள் மற்றும் பல்வேறு கழிவுகள் கலப்பதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு, நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணப் பிரசாத் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் புகைப்படத்துடன் கூடிய ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், இதனை சரி செய்ய யார் நடவடிக்கை எடுக்க வேண்டும்? பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து மக்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதியில் சாக்கடை கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இந்தியா முழுவதும் இருந்து தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என கேள்வி எழுப்பினர். உடனடி நடவடிக்கை மேற்கொண்டாலே இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் என கருத்து தெரிவித்தனர்.

மேலும் இதே தொடர்புடைய மற்றொரு வழக்கில், வழக்கறிஞர் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையை, முழுமையாக தாக்கல் செய்யவும், வழக்கு குறித்து நகராட்சி நிர்வாகம், நீர்வளங்கள் துறைச் செயலர், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ராமேஸ்வரம் சிவன் கோயில் இணை ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.