ஒன்றிணைகின்றனவா எதிர்க்கட்சிகள்? – நிதிஷ்குமார், தேஜஸ்வியுடன் ராகுல் காந்தி சந்திப்பு!

நாட்டிற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக தேர்தலை நோக்கி முன்னேற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழும விவகாரம், ராகுல் காந்தி தகுதி நீக்கம் உள்ளிட்டவை நாடாளுமன்ற பட்ஜெட்…

நாட்டிற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக தேர்தலை நோக்கி முன்னேற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அதானி குழும விவகாரம், ராகுல் காந்தி தகுதி நீக்கம் உள்ளிட்டவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும் புயலை கிளப்பிய நிலையில், நடப்பாண்டில் கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 6 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைய உள்ளதால் தேசிய கட்சி தலைவர்கள் கூட்டணி குறித்த வியூகத்தை அமைத்து வருகின்றனர்.

அந்த வகையில், டெல்லியில் ராகுல் காந்தியுடன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், ஜேடி(யு) தலைவர் லாலன் சிங், மாநிலங்களவை எம்பி மனோஜ் குமார் ஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்வது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள் : சட்டப்பேரவையில் இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகளை இணைத்த 58 கிராம கால்வாய் பிரச்னை

கூட்டத்திற்குப் பின்னர் அனைத்து தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு. பல விஷயங்களைப் பற்றி இந்த கூட்டத்தில் கலந்துரையாடினோம். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, வரவிருக்கும் தேர்தலில் ஒற்றுமையாக போராட அனைவரும் முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், முடிந்தவரை பல கட்சிகளை ஒன்றிணைத்து, ஒற்றுமையாக செயல்பட இருப்பதாக தெரிவித்தார்.

பின்னர் பேசிய ராகுல்காந்தி, ”இந்த கூட்டமானது எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சி. நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம். எதிர்கட்சிகளின் தொலைநோக்கு பார்வையை வளர்த்துக்கொண்டு பயணிக்க உள்ளோம். அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக தேர்தலை நோக்கி முன்னேற உள்ளோம். பாஜகவை வீழ்த்த விரும்பும் கட்சிகளோடு ஒன்றாகச் செயல்படுவோம். இந்திய நாட்டிற்கான ஒரு சித்தாந்தப் போரை எதிர்கொண்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.