சாலை விபத்தில் உயிருக்கு போராடியவரை ஆம்புலன்ஸ் வர தாமதம் காவல் வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை விபத்தில் கால் துண்டாகி உயிருக்கு போராடிய இளைஞரை ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் காவல்துறை வாகனத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவல் ஆய்வாளர் செந்தில் மாறனுக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
புதுக்கோட்டையை அடுத்த கணபதி புறத்திலிருந்து கந்தர்வகோட்டை நோக்கிச் சென்ற மினி லாரி காட்டு நாவல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த சாலை மினி லாரி கடக்கும்போது இருசக்கர வாகனத்தில் எதிரில் வந்த முருகேசன் என்பவர் மினி லாரியின் மீது நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் கால் துண்டாகி விட்டது.
இதனையும் படியுங்கள்: போடி அருகே காட்டுத் தீ – அணைக்க முடியாமல் திணறும் வனத் துறையினர்
விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் செந்தில் மாறன் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்தார்.
ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் அவரது காவல் வாகனத்திலேயே ஏற்றி முதலுதவி செய்து தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். காவல் ஆய்வாளரின் மனிதாபிமான செயலைக் கண்ட பொது மக்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த விபத்து குறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
- கே.ரூபி







