சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு சிறுமி புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஒன்பதாவது வழக்காக கடந்த 13.11.2026 அன்று புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜெம் வீரமணி மீது எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மேலும் ஒரு சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒன்பதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், சிறுமிகளை அழைத்து வந்து பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் வீரமணியின் ஓட்டுநர் பாலா என்கிற பெருமாளை, காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று (நவ.14) கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
வீரமணியின் வீட்டில் போலீசார் சோதனை!
இதற்கிடையே, வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டில் காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
மயிலாப்பூர் வட்டாட்சியர் மற்றும் நிர்வாக நடுவர் முன்னிலையில் இந்தச் சோதனை நடைபெற்றது.
13 சிறுமிகள் தொடர்பாக 9 வழக்குகள் – 10 பேர் கைது!
இதுவரை 13 சிறுமிகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், ஜெம் வீரமணி மீது மொத்தம் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒன்பது வழக்குகளில் ஒரு வழக்கிற்கு கடந்த 11.11.2026 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை நடைபெற உள்ளது.
சிறுமிகள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த வழக்குகளில் சிறப்பு புலனாய்வுக் குழுவினரின் அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




