மேகதாட்டு அணை விவகாரம்: கர்நாடக அரசுக்கு சிபிஐஎம் கண்டனம்!

மேகதாட்டு அணையை எப்படியாவது கட்டியே தீருவோம் எனக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தொடர்ந்து பேசி வருவது தமிழக விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் தந்திரம் என்று சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாட்டு அணை விவகாரத்தில் தொடர்ந்து பேசி வருவதைக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், தமிழக விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தவும், கர்நாடக விவசாயிகள் மத்தியில் தன்னை ஒரு பாதுகாவலராக முன்னிறுத்தவும் திட்டமிட்டு செயல்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

பெ.சண்முகத்தின் எக்ஸ் பதிவு:

“மேகதாட்டு அணை கட்டிய தீருவோம்” என்று கர்நாடக மாநில முதலமைச்சர் திரு. டி. கே. சிவக்குமார் அவர்கள் அடிக்கடி கூறிக் கொண்டே இருக்கிறார். இதன் மூலம், தமிழக விவசாயிகள் மத்தியில் பதற்றத்தை உருவாக்குவதும், கர்நாடக விவசாயிகள் மத்தியில் “காவலன்” என்ற எண்ணத்தை விதைப்பது என்று தந்திரமாக செயல்படுகிறார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதவாரியாக தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை இதுவரை ஒரு வருடம் கூட கர்நாடகா வழங்கியது இல்லை என்ற உண்மையை மறைத்து விட்டு, தமிழ்நாட்டிற்கு தேவை 177 டி.எம்.சி தானே, அதை நாங்கள் திறந்து விடுவோம் என்று நியாயவான் போல் பேசுகிறார்.

காவிரி பன் மாநிலங்கள் சம்பந்தப்பட்ட நதி என்பதையும், இது தொடர்பான உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பையும் “இமயமலையை இலைச் சோற்றில் மறைக்கும்” கதையாக கர்நாடக முதலமைச்சர் மூடி மறைப்பது கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு காவிரி பாசன உரிமையை பாதுகாப்பதில், கர்நாடகாவின் சதியை முறியடிப்பதில் ஒன்றுபட்டு நிற்போம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.