கோந்தல், ஜான் டோ, பிளாக் கோல்டு, டைட்டானிக் படங்கள் எப்படி இருக்கு?

இந்த வாரம் அர்ஜூன்தாஸ் நடித்த ஜான் டோ, வெற்றி நடித்த பிளாக் கோல்டு, கலையரசன் நடித்த டைட்டானிக், இளையராஜா இசையமைத்த கோந்தல் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களின் மினி ரிவியூ இதோ!

இந்த வாரம் அர்ஜூன்தாஸ் நடித்த ஜான் டோ, வெற்றி நடித்த பிளாக் கோல்டு, கலையரசன் நடித்த டைட்டானிக், இளையராஜா இசையமைத்த கோந்தல் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களின் மினி ரிவியூ.

கோந்தல்

சந்தோஷ் தவாகர் இயக்கத்தில் மராத்தி மொழியில் உருவான கோந்தல் என்ற படம், இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் செல்கிறது. இளையராஜா இசையமைத்த இந்தப் படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

1970-80 காலகட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஓர் இரவில் நடக்கும் கதை கோந்தல். அந்த ஊரில் பணக்காரரான யோகேஷுக்கும், இஷிதா தேஷ்முக்கிற்கும் திருமணம் நடக்கிறது. அந்த ஊர் வழக்கப்படி, அன்று இரவில் குலதெய்வங்களை வணங்கும் நாட்டுப்புறக் கலையை அடிப்படையாகக் கொண்ட கூத்து நடைபெறுகிறது. அதைத் திருமண வீட்டார் மற்றும் ஊர் மக்கள் பார்த்து ரசிக்கிறார்கள். அப்போது ஊர் தலைவரின் மகன் மணமகள் மீது ஆசைப்படுகிறான். மணமகனைக் கொல்ல நினைக்கிறான். கூத்தில் ஆடும் தனது காதலனுடன் ஓடத் திட்டமிடுகிறார் மணப்பெண் இஷிதா. இதற்கிடையில், ஊர் தலைவரைப் பழிவாங்க நினைக்கிறார் அந்த ஊர் பெரியவர். ஊர் மக்களை ஏமாற்றி நிலத்தை வாங்குகிறார். இப்படிப்பட்ட சூழலில் நடைபெறும் கூத்தில் என்ன நடக்கிறது? அந்த இரவு எப்படி முடிகிறது? திருமணச் சடங்குகள், மணமக்கள், அவர்களது உறவினர்கள், வீட்டாரின் மனநிலை, கிராம மக்களின் கொண்டாட்டம், கிண்டல், சந்தோஷம் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

மணமகளாக வரும் இஷிதாவைச் சுற்றிக் கதை நகர்கிறது. மராத்திய மணப்பெண் தோற்றம், அவரது துள்ளலான நடிப்பு, கிண்டலான பேச்சு ஆகியவை படத்துக்குப் பலம். வில்லனை உசுப்பேற்றும் விதம், காதலனைப் பார்த்துக் கதறுவது, பெற்றோர்களுடன் சண்டையிடுவது எனப் பல இடங்களில் தனது நடிப்பால் கலக்கியிருக்கிறார். மணமகனாக வரும் யோகேஷ், அப்பாவித்தனமான பேச்சு மற்றும் நடிப்பால் மனதில் நிற்கிறார். ஊர் பெரியவராக வரும் சுரேஷும், அவரது மகன் நிஷாத்தும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ஊர் பெரியவராக வரும் கிஷோர், கூத்து நடத்துபவர்கள், மணமக்களின் பெற்றோர்கள், மாமியார் கதாபாத்திரம் எனப் படம் முழுவதும் இடம்பெறும் பல்வேறு கதாபாத்திரங்களும் நடிப்பில் கலக்கியிருக்கின்றன.

இளையராஜாவின் இசை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அந்த நாட்டுப்புறக் கலை, அதில் சொல்லப்படும் குலதெய்வக் கதைகள், அந்தக் கலைஞர்களின் பாடல்கள், கிண்டல், ஆக்ரோஷம் என அனைத்திலும் இசை பிரமாதம். ஒரு பாடலில் கூட தாளம் போட வைக்கிறார். ஒரு மராத்தியப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருப்பதும், அந்தப் படம் ஆஸ்கர் போட்டியில் கலந்துகொள்வதும் நமக்குப் பெருமை. ஒளிப்பதிவாளர் அமலேந்து சவுத்ரி, 25 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியில் தனது திறமையை நிரூபிக்கிறார். இரவில் நடக்கும் திருமணச் சடங்குகள், கூத்துக் காட்சிகள், கிராமத்துப் பின்னணியை அவர் காட்டிய விதம் அருமை.

திருமணம், நாட்டுப்புறக் கலை ஆகியவற்றை மட்டும் காண்பிக்காமல், அடிமை முறை, போட்டி மனநிலை, மனித உளவியல், அந்தக் கால மராத்திய கிராமியக் கட்டமைப்பு, கிராம மக்கள், அவர்களின் சடங்கு முறைகள், குலதெய்வ வழிபாடு, துரோகம், கோபம், வெற்றி எனப் பல விஷயங்களை கோந்தல் படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள், இசை, கிராமம், அந்தக் கூத்துக் கலை ஆகியவற்றை பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாது. அப்படியொரு அழுத்தமான படைப்பு.

ஜான் டோ

கேரள போலீஸ் அதிகாரியான அர்ஜூன்தாஸும், தமிழக போலீஸ் அதிகாரியான சஞ்சனா நடராஜனும் ஒரு வழக்கை விசாரிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட முக அமைப்பும், குறிப்பிட்ட வயதும் கொண்ட சிறுவர்களைக் கடத்தி, ஏரிக்குள் காரில் அடைத்துக் கொல்கிறான் கொலையாளி. அப்படிச் செய்வது ஏன்? அவன் யார்? அந்த வழக்கைத் துப்பறியும் இருவரும் அவனை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பது ஜான் டோ படத்தின் கதை. மதுமிதா இயக்கியிருக்கிறார்.

துபாயில் இருந்து வரும் ஸ்ரிஷ்டியும், அவரது மகள் ஜாராவும், மகன் நீரவ்வும் ஒரு மலைவாழ் பகுதிக்கு வருகிறார்கள். அந்தக் குடும்பத்தில் சில பிரச்சினைகள். அப்போது சிறுவன் நீரவ் திடீரெனக் காணாமல் போகிறான். பலரிடம் விசாரிக்கிறார் போலீஸ் அதிகாரி சஞ்சனா. இதற்கிடையில், பக்கத்து எல்லையில் கேரளாவில் உள்ள ஓர் ஏரியில் சிறுவன் காருக்குள் அடைத்துக் கொல்லப்படுகிறான். அந்த வழக்கை விசாரிக்கிறார் அர்ஜூன்தாஸ். ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து வழக்கை விசாரிக்க, பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவருகின்றன. அவை என்ன என்பது கிளைமாக்ஸ்.

ஜான் டோ என்றால் அடையாளம் தெரியாத ஆண் சடலம் என்று அர்த்தம். அப்படிப்பட்ட சடலத்தின் பின்னணியில் கதை தொடங்குகிறது. படத்தின் முக்கியமான பகுதிகளான விசாரணை, திருப்பங்கள், சிறுவர்களின் பின்னணி ஆகியவற்றைச் சிறப்பாகக் கையாண்டு ஒருவித பயத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் மதுமிதா. சிறுவர்கள் காணாமல் போவது எப்படி? அவர்களைத் தவறாகப் பயன்படுத்தும் கூட்டம், சந்தேகப்படும் நபர்கள், அந்தக் கொலைகளுக்கான ஒற்றுமை எனத் திரைக்கதையும் நச்.

போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், சிறு வயதில் அப்பாவின் டார்ச்சரால் பாதிக்கப்பட்டவராக அர்ஜூன்தாஸ் நடித்திருப்பதும், திமிரான போலீஸ் அதிகாரியாக சஞ்சனா நடித்திருப்பதும் படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கின்றன. காணாமல் போன சிறுவனாக வரும் நீரவ், அவரது அம்மா ஸ்ரிஷ்டி ஆகியோரும் நல்ல தேர்வு. சிறுவனின் அக்காவாக வரும் அர்ச்சனாவின் மகள் ஜாராவின் மாறுபட்ட தோற்றம், அவரது கோபம், நடிப்பு ஆகியவை சூப்பர். இவர்களைத் தவிர, ஜெயப்பிரகாஷ், அனுபமா குமாரும் கதைக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் குறித்து சிலருக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். இன்னும் அதிகமான திரில்லர் காட்சிகள் இருந்திருக்கலாம் என்ற விமர்சனங்களும் வரலாம்.

சிறுவர்கள் கடத்தல், மனநிலை பாதிப்பு, சைக்கோ எனப் பல அம்சங்களைக் கொண்டு கதையை நகர்த்திச் சென்று, கடைசியில் இன்னொரு ட்விஸ்ட் கொடுப்பது ஜான் டோ படத்தை ரசிக்க வைக்கிறது. மற்ற திரில்லர் படங்களில் இருந்து மாறுபட்டுக் காண்பிக்கிறது. அர்ஜூன்தாஸ், சஞ்சனா ஆகியோரின் நடிப்பும், ப்ரீதாவின் ஒளிப்பதிவும் படத்தை விறுவிறுப்பாக்கியிருக்கின்றன. கிளைமாக்ஸில் தெரியவரும் கொலைகளின் பின்னணி அதிர்ச்சியளிக்கிறது. திரில்லர் பிரியர்களுக்கு ஜான் டோ பிடிக்கும்.

பிளாக் கோல்டு

தீரன் அருண்குமார் இயக்கத்தில் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், அருள் டி.சங்கர், கராத்தே வெங்கடேசன் உட்பட பலர் நடித்த மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம். ஆம், பிளாக் கோல்டு என்பது தலைமுடியைக் குறிக்கிறது. கோயில்களில் மொட்டை அடிக்கும் பக்தர்களின் முடியை ஏற்றுமதி செய்யும் இரண்டு வில்லன் குழுக்களுக்கு இடையே மோதல். அதில் அப்பா, மகன் பாசம் என்ன செய்கிறது என்பதை ஆக்‌ஷன் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

தலைமுடியை மொத்தமாக ஏலம் எடுத்து, அதை விக் உள்ளிட்ட பொருள்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்கிறார்கள் வில்லன்களான அருள் டி.சங்கரும், ஏ.வெங்கடேஷும். கோடிக்கணக்கில் பணம் புழங்கும் இந்தத் தொழிலில் ஏகப்பட்ட போட்டி. ஏ.வெங்கடேஷிடம் டிரைவராக வேலை செய்யும் லிவிங்ஸ்டன், பல கோடி மதிப்புள்ள தலைமுடியை லாரியில் எடுத்துச் செல்லும்போது காணாமல் போகிறார். அந்த லாரியும் கடத்தப்படுகிறது. அவரது மகனான வெற்றி, என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கிறார். நடந்தது என்ன? அப்பாவுக்காக மகன் என்ன செய்கிறார் என்பது கதை.

ஹீரோவாக நடித்த வெற்றி, காதல் காட்சிகளில் ஓரளவு நடித்திருக்கிறார். அவருக்கும் பிரியாலயாவுக்குமான காதல், மாமனாருடன் மோதல் எனப் படம் தொடங்குகிறது. இரண்டு வில்லன்களின் அறிமுகம், அவர்களது தொழில் போட்டி எனத் திரைக்கதை மாறும்போது சூடுபிடிக்கிறது. லிவிங்ஸ்டன் கடத்தப்பட்டவுடன் இன்னும் வேகம் எடுக்கிறது. அப்பா பாசம் தொடர்பான காட்சிகளில், அப்பாவைக் கண்டுபிடிக்கும் இடங்களில் வெற்றியின் நடிப்பு பரவாயில்லை. கடைசியில் அப்பாவைக் கடத்திய கும்பலைக் கண்டுபிடித்து அவர் போடும் சண்டை, பதிலடி கொடுக்கும் விதம் ஆகியவை ஆக்ரோஷமாக இருக்கின்றன.

அப்பாவாக நடித்த லிவிங்ஸ்டன் அன்பைப் பொழிகிறார். சில இடங்களில் அப்பாவித்தனமான நடிப்பில் கலக்கியிருக்கிறார். அவரது மனைவியாக துளசி வருகிறார். இரண்டு வில்லன்களில் அருள் டி.சங்கரின் நடிப்பும், சுருள்வாள் கொண்டு அவர் போடும் சண்டையும் பரபரப்பு. ஏ.வெங்கடேஷின் நடிப்பில் சினிமாத்தனம் தெரிகிறது. அருள் டி.சங்கரின் மகளாக வரும் சபிதா ராயும் மனதில் நிற்கிறார். இவர்களைத் தவிர, இன்னொரு கொடூர வில்லன் கும்பலாக வரும் கராத்தே வெங்கடேசன் உள்ளிட்ட நால்வர் அணியினர், வில்லத்தனத்தில் தனி ரூட்டில் மிரட்டியிருக்கிறார்கள். பணத்துக்காக இவர்கள் செய்யும் கொலைகளும், அதற்காகப் போடும் திட்டங்களும் உண்மையிலேயே அச்சப்பட வைக்கின்றன. தயாரிப்பாளர் மூர்த்தியும் பணம் பறிக்கும் போலீஸ்காரராக வந்து, கடைசியில் திருந்துகிறார்.

தலைமுடி வணிகம், அதன் பின்னணியில் இருக்கும் பணப்புழக்கம் குறித்து இதுவரை எந்தப் படமும் இவ்வளவு விரிவாகச் சொன்னதில்லை. அதை அப்பா பாசம், ஆக்‌ஷன் பின்னணியில் சொன்னது அருமை. சில குறைகள் இருந்தாலும் மாறுபட்ட படம்.

டைட்டானிக்

பெங்களூரில் நடைபெறும் தனது திருமணத்துக்காக சென்னையில் இருந்து ரயிலில் பயணம் செய்கிறார் இளம் ஹீரோ ராகவ் விஜய். அவருடன் கலையரசன், காளி வெங்கட்டும் அதே கோச்சில் பயணம் செய்கிறார்கள். தனது பள்ளிப் பருவக் காதலைச் சொல்கிறார் காளி வெங்கட். கல்லூரிக் காலத்தில் தனக்கு ஏற்பட்ட காதலைச் சொல்கிறார் கலையரசன். அலுவலகத்தில் தனக்கு ஏற்பட்ட காதலைச் சொல்கிறார் ராகவ் விஜய். கடைசியில், தனது திருமணத்துக்கு நீங்கள் வர வேண்டும் எனக் கலையரசன், காளி வெங்கட் ஆகியோருக்கு ராகவ் அழைப்பு விடுக்கிறார். அந்தத் திருமணத்தில் மணப்பெண்ணாக இருப்பவர் ஆனந்தி. அவர் வேறு யாருமல்ல; சிறு வயதில் காளி வெங்கட் காதலித்தவர், கல்லூரிக் காலத்தில் கலையரசன் காதலித்தவர். தவிர, அலுவலகத்தில் ராகவ் காதலித்த ஆஷ்னா சவேரியும் அங்கே வர, என்ன நடக்கிறது என்பது கதை. ஜானகிராமன் இயக்க, பல வெற்றிப் படங்களைக் கொடுத்த சி.வி.குமார் தயாரித்திருக்கிறார்.

இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள், காதல், திருமணம், காமெடி என அனைத்தையும் கலந்து டைட்டானிக்கை கமர்ஷியலாக இயக்கியிருக்கிறார் இயக்குநர். கோவைப் பின்னணியில் காளி வெங்கட்டின் பள்ளிப் பருவக் காதல் கொஞ்சம் காமெடியாக இருக்கிறது. கலையரசனின் காதல் கலர்ஃபுல். ராகவின் காதல் இன்னொரு ரகம். இப்படி மூன்று காதல்களை மாறுபட்ட வடிவில் காண்பித்திருக்கிறார் இயக்குநர். இவர்கள் அனைவரும் திருமணத்தில் கூடுவதும், தங்களுக்குள் அதிர்ச்சியடைந்து, மற்றவர்களையும் அதிர்ச்சியடைய வைப்பதும், அங்கே சில ட்விஸ்ட்கள் நடப்பதும் நல்ல திரைக்கதை.

சற்றே முதிர்ந்த பள்ளி மாணவன், காதலன், பின்னர் மூன்று குழந்தைகளுக்குத் தந்தை எனப் பல்வேறு பரிமாணங்களில் நடிப்பில் மிளிர்கிறார் காளி வெங்கட். அவருக்கும் மனைவி மதுமிதாவுக்குமான சண்டை, பாசம் ஆகியவை நல்ல காட்சிகள். கிளைமாக்ஸிலும் காளி வெங்கட்டின் தேர்ந்த நடிப்பு பாராட்டத்தக்கது. கலையரசனும் தனக்கான இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனந்திக்கும் அவருக்குமான காதல், ஆஷ்னாவுக்கும் அவருக்குமான உரையாடல்கள் விறுவிறுப்பாக இருக்கின்றன. ராகவ் விஜய்யும் காதல், திருமணக் காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார்.

இவர்களை விட, காதலியாகவும் மணப்பெண்ணாகவும் வரும் ஆனந்தி படம் முழுவதும் கலக்கியிருக்கிறார். குறிப்பாக, கிளைமாக்ஸில் காதலர்கள், வருங்காலக் கணவன் ஆகியோருக்கு மத்தியில் தவிப்பது அழகு. பாடல்கள் ஓகே. சேத்தன், தேவதர்ஷினி, காயத்ரி கவுரவத் தோற்றத்தில் வருகிறார்கள். காதல் காட்சிகளில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம். பாடல்கள் இன்னும் ஹிட்டாகியிருக்கலாம். ஆனாலும், காதலைப் புதிய கோணத்தில் சொன்னதில் டைட்டானிக் பரவாயில்லை ரகம்.

மீனாட்சிசுந்தரம், சிறப்புச் செய்தியாளர்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.