பழுதான பிரேக்குடன் 463 கி.மீ. பயணித்த வந்தே பாரத்!

பிரேக் செயலிழந்த நிலையில் காலியான வந்தே பாரத் ரயில் சுமார் 463 கி.மீ. தூரம் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தென்கிழக்கு ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றான வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட இந்தப் பாதுகாப்புக் குறைபாடு கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி நகருக்கு காலியான வந்தே பாரத் சேர் கார் பெட்டிகள் சரக்கு ரயில் இன்ஜின் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அப்போது, ரயில் பெட்டிகளின் பிரேக்கிங் அமைப்பை இன்ஜினுடன் முறையாக இணைக்காததால், பெட்டிகளின் பிரேக்குகள் செயல்படாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரயில் ஓட்டுநர்கள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதனைப் பொருட்படுத்தாமல் ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டுள்ளது.

ராஞ்சியிலேயே எச்சரித்த ஓட்டுநர்!

ஹட்டியாவில் இருந்து ரயில் புறப்பட்ட பிறகு, ரயில் ஓட்டுநர் பிரேக் பவர் சோதனையை மேற்கொண்டார். அப்போது பிரேக்குகளின் செயல்பாடு மிகவும் மோசமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ராஞ்சி ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், ரயில்வே அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார். இருப்பினும், ரயிலை தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முரி ரயில் நிலையத்தில் இருந்து ரயிலை இயக்கிய மற்றொரு ஓட்டுநரும் பிரேக்கில் ஏற்பட்ட கோளாறு குறித்து சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பிரேக் பைப் (Brake Pipe – BP) அழுத்தத்தைக் குறைத்தும் ரயில் பெட்டிகளின் பிரேக்குகளைச் செயல்படுத்த முடியவில்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.

அனைத்து பெட்டிகளிலும் பிரேக் செயலிழந்தது!

இருப்பினும், ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டு சுமார் 463 கி.மீ. தூரத்தைக் கடந்துள்ளது. இறுதியாக, உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா (DDU) ரயில் நிலையத்தை வந்தடைந்தபோதுதான் அதிகாரிகள் ரயில் பெட்டிகளை ஆய்வு செய்தனர். அப்போது, அனைத்து பெட்டிகளிலும் பிரேக்கிங் அமைப்புகள் தனிமைப்படுத்தப்பட்டு (Isolated) செயலிழந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், ரயில் பெட்டிகளில் பிரேக்குகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

அதிகாரிகளின் அலட்சியம் குறித்து விசாரணை!

இந்தச் சம்பவம் தொடர்பாக நவம்பர் 7-ஆம் தேதி தென்கிழக்கு ரயில்வே மண்டலம் விசாரணைக்கு உத்தரவிட்டது. ராஞ்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM), இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், ரயில் பெட்டி மற்றும் சரக்கு வண்டி பராமரிப்புப் பணியாளர்கள், பிரிவு மற்றும் இழுவை மின் கட்டுப்பாட்டு அதிகாரிகள், ரயில் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அலட்சியம் இருந்திருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ரயில் புறப்படுவதற்கு முன்பாகப் பராமரிப்புப் பணியாளர்கள் நேரடியாகப் பெட்டிகளின் பிரேக்குகளைச் சோதனை செய்து உறுதிப்படுத்தத் தவறியுள்ளனர். மேலும், வந்தே பாரத் ரயிலின் பிரேக்கிங் அமைப்பு குறித்து ரயில் ஊழியர்களுக்குப் போதிய பரிச்சயம் இல்லாததும் இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 11-ஆம் தேதி அசாமில் கொல்கத்தா – சைராங் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ரயில்வே செயல்பாடுகளில் அலட்சியம் குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தற்போது வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்டுள்ள இந்தச் சம்பவம் ரயில்வே பாதுகாப்பு குறித்த கவலையை மேலும் அதிகரித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.