முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரடியாக சென்று துக்கம் விசாரித்து ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது…

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரடியாக சென்று துக்கம் விசாரித்து ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த ஒரு சில வாரமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் வீட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில், பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த 24ம் தேதி இரவு 10 மணியளவில் பழனியம்மாள் உயிர் பிரிந்தது. ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்றார். அங்கு ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை பழனியம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முன்னாள் முதலமைச்சர், ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்குச் சென்று, அவரது தாயார் பழனியம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டேன். இந்தப் பேரிழப்பைத் தாங்கும் மன வலிமையை ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பெற இறைவனை வேண்டுகிறேன். தாயாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.