ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கை தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து பேசிய அவர், அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் சமூக வலைத்தளத்தில் தன்னை ஒருமையில் விமர்சனம் செய்துள்ளார் என வேதனை தெரிவித்தார். மேலும், திட்டுவதற்கு கூட மரியாதையுடன் அழகு தமிழை பயன்படுத்துங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “இணையதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடுகளை கண்டால் மிகுந்த பயமாக உள்ளது. இணைய வழியில் தமிழை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம். எனவே இணையத்தில் தமிழ் மொழியை சரியாக பயன்படுத்துங்கள். திட்டுவதற்கு கூட மரியாதையுடன் அழகு தமிழை பயன்படுத்துங்கள். விமர்சனம் என்பது தமிழரின் பங்கு ஆனால் அதை மரியாதையான சொற்களுடன் பயன்படுத்த வேண்டும்” என கூறினார்.
சென்னை கமலாயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுகவினர் தவறான தகவல்களை பரப்புவதாக குறை கூறினார். இரண்டு மாநிலங்களில் ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்து அவரை கண்கலங்க செய்துள்ளதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தனது வாழ்க்கையை புரட்டி போட்டு பார்த்தாலும் ஒரு கடுகு அளவு கூட ஆதாரங்கள் கிடைக்காது எனக்கூறினார். எனது கேள்விகளுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் அளிக்கும் வரை கேள்விகளை கேட்டு கொண்டே இருப்பன் எனக்கூறிய அண்ணாமலை, உரசி பார்க்கலாம் என்றால் அதற்கும் நான் தயாராக உள்ளதாக தெரிவித்தார். நாணயத்திற்கு இருபக்கம் உள்ளதை திமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அண்ணாமலை ஆவேசம் தெரிவித்தார்.







