நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழில், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், அரண்மனை, உத்தமவில்லன், தரமணி, வடசென்னை உட்பட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. பல திரைப் பாடல்களையும் பாடியுள்ள இவர், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
’கடந்த வாரம் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையறிந்து என்னை கவனித்துக் கொண்ட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. இப்போதும் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு இருக்கிறேன். ஆனால், குணமடைந்து வருகிறேன்’என்று சமூக வலைதளப்பக்கத்தில் கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலர் அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நாட்டில் நேற்று 3,980 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,30,168 ஆக அதிகரித்துள்ளது
இந்த தொற்றால் பல சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது நடிகை ஆண்ட்ரியாவும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.







