வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு தவறான செய்தி வெளியிட்டதாக அன்புமணி ராமதாஸ் காட்டம்!

வன்னியர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி தொடர்பாக தகவல் அறியும் சட்டம் மூலம் பொய்யான தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர்…

வன்னியர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி தொடர்பாக தகவல் அறியும் சட்டம் மூலம் பொய்யான தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கொண்டையன்கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக சில தகவல்களை பெற்றார். அதில், ”பாமக வலியுறுத்தி வரும் 10.5% இடஒதுக்கீடை விட அதிகமாக வன்னியர் சமூகத்தினர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பிரதிநிதித்துவத்தை பெற்று வருகின்றனர். 2018 மற்றும் 2022-க்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட 24,330 மருத்துவ இடங்களில், 20% ஒதுக்கீட்டின் கீழ் 4,873 பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வன்னியர் சமூக மாணவர்கள் மட்டும் 3,354 பேர் (13.8%).

இதே காலகட்டத்தில் 20% ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவத்தில் சேர்க்கை பெற்ற 6,966 மாணவர்களில், வன்னியர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் 13.5% இடங்களை பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பணிகளில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய தரவுகளின்படி, 2013 முதல் 2022 வரை நிரப்பப்பட்ட குரூப்-IV பணியிடங்கள் 26,784-ல், வன்னியர்கள் 5,215 (19.5%) இடங்களை பெற்றுள்ளனர்.

2012 மற்றும் 2023 க்கு இடையில் நிரப்பப்பட்ட TNPSC குரூப்-II பணியிடங்களில், 11.2% வன்னியர் சமூகத்தினர் பெற்றுள்ளனர். ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் உள்பட பல்வேறு அரசுத்துறை பணிகளிலும் வன்னியர் சமூகத்தினர் 10.5%த்தை விட அதிகமாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று (ஆக. 4) திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்னி சட்டியில் கை வைத்துள்ளார். அது சுட்டுவிடும். வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி தொடர்பான தகவல் அறியும் சட்டம் மூலம் பொய்யான தகவலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அரசாக அல்லாமல், அரசியல் கட்சியாக செயல்படுகிறது. இட ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.