மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “அமித்ஷா அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைய முயற்சி எடுத்தார்கள். தினகரன் அவசர குடுக்கை அல்ல, விளம்பரத்துக்காக பூங்கொத்து கொடுப்பவர் நான் அல்ல.
மூப்பனார் மீது மிகுந்த மதிப்பு கொண்டவன். என்னை அழைக்கவில்லை என்பது எனக்கு நல்லது தான். அழுத்தம் இல்லாமல் இருக்கலாம் அல்லவா. எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் எடப்பாடி பழனிசாமி எனக்கு அண்ணன் தான். எடப்பாடி பழனிசாமி இருந்ததால் நான் தேர்தலிலேயே இருக்க மாட்டேன் என சொன்னேன். எனக்கு அவருடன் சட்டமன்றம் செல்ல விருப்பமில்லை. அண்ணாமலை இருந்த வரை எல்லாம் சரியாக இருந்தது. நயினார் தான் பன்னீர்செல்வம் வெளியேறுவதற்கு காரணம்.
நாங்கள் வெளியேறுவதற்கு பாஜக, நயினார் காரணம் அல்ல. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் விழிக்கவில்லை என்றால் அதிமுக ஆட்சிக்கு வருவது கனவாகவே போகும். 2026 தேர்தலில் எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளது, யாருடனும் கூட்டணி அமைப்போம். நாங்கள் ஆட்சியமைக்க போகிற கூட்டணியில் இருப்போம். அமமுக உறுதியாக வெற்றி முத்திரை பதிக்கும். அதிமுகவில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம்.
என்னைப் போலவே அண்ணாமலை வெளிப்படையான நபர். அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. அமமுக நலனுக்கு அவரது நீக்கம் சரியாக இருக்காது என நினைத்தேன். எங்களை கூட்டணிக்கு அண்ணாமலை தான் கொண்டு வந்தார். பன்னீர்செல்வம் விஷயத்தில் நயினாரின் செயல்பாடு எனக்கு மன வருத்தத்தை அளித்தது. எத்தனையோ கைதுகளை பார்த்தவன் நான். நான் யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.







