சிறுமுகை வனப்பகுதியில் 8 மாத குட்டி யானை வாயில் ரத்த காயத்துடன் உயிரிழந்து உள்ளது. அந்த யானையின் உடலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் ஏராளமான வன உயிரினங்கள் வாழ்ந்து வரும் நிலையில் இங்கு காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட வேடர் காலனி அருகே ஏராக்குறை பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வாயில் ரத்தத்துடன் சுமார் 8 மாத குட்டி யானை இறந்து கிடந்தது தெரிய வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து இன்று காலை அப்பகுதிக்கு விரைந்த சிறுமுகை வனச்சரகர்
செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் இறந்து கிடந்த யானையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி வனக்கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார், சிறுமுகை உதவி கால்நடை மருத்துவர் தியாகராஜன் முன்னிலையில் இன்று யானையின் உயிரிழப்பிற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை செய்யபட்டது.
பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு யானையின் உடலின் சில பாகங்கள் ஆய்வுக்காக
எடுத்து கோவைக்கு அனுப்பி வைத்த மருத்துவர்கள் ஆய்வுக்கு பின் தான் குட்டியானை
எதனால் உயிரிழந்தது என தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவையில் தொடர்ந்து கடந்த சில மாதங்களில் 10 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்
பரிதாபமாக பலியாகி உள்ள சம்பவம் வன ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.