மத்திய அரசு ஆளுநருக்குப் புத்திமதி கூற வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய டி.ஆர்.பாலு, இந்த தொடரில் திமுக தரப்பில் பேச வேண்டிய மிக முக்கமான விசயம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என வலியுறுத்தியதாகவும், விலை வாசி உயர்வு மற்றும் அதற்குக் காரணமான பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு குறித்து முன்னுரிமை கொடுத்துப் பேச வேண்டும் எனத் தெரிவித்ததாகக் கூறினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ராணுவத்தில் தற்காலிக ஆள் சேர்ப்பு தொடர்பான அக்னிபாத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் எனத் தெரிவித்ததாகவும், இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடி குறித்துக் கூடுதல் கவனம் செலுத்திப் பேச வேண்டும் என வலியுறுத்தியதாகத் தெரிவித்த அவர், உக்ரைன் போரால் அங்குப் படிக்கச் சென்று பாதியில் திரும்பிய மாணவர்களுக்கு தயாகத்தில் படிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும். எனவே, அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் குறிப்பிட்டுப் பேசியதாகக் கூறினார்.
அண்மைச் செய்தி: ‘நியூஸ் 7 தமிழ் பக்தியின் புத்திர காமேஷ்டியாகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு’
தொடர்ந்து பேசிய அவர், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாகவும் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்க வேண்டும் எனக் கோரியதாகத் தெரிவித்த அவர், அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி விதித்தது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனக் கூறியதாகத் தெரிவித்தார்.
உக்ரைனிலிருந்து 14 ஆயிரம் இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பி 6 மாதங்கள் ஆகிவிட்டது. அதனால், அவர்கள் அனைவரும் இங்கே மருத்துவம் பயிலத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும், அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் எனத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட அவர், வனதிருச்ச சட்டத்தை நிறைவேற்றக்கூடாது, இந்தியா-சீனா எல்லை பிரச்சினை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் எனத் தெரியப்படுத்தியதாகப் பேசினார்.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் பா.ஜ.க. கட்சிக்குப் பிரச்சாரம் செய்யும் நபராகச் செயல்பட்டு வருகிறார் எனக் குற்றச்சாட்டு தெரிவித்த அவர், கல்லூரி பட்டமளிப்பு விழாவிலும் இதைச் செய்து வருவதாகவும், சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு ஆளுநருக்குப் புத்திமதி கூற வேண்டும். இல்லையெனில் தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.