ராணிப்பேட்டையில் கை, கால், தலையில் சரமாரியாக வெட்டி விசிக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மழையூர் கிராமம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவரது மகன் பார்த்தசாரதி (வயது 35) விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆற்காடு தொகுதி இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பார்த்தசாரதி தனது இருசக்கர வாகனத்தில் செய்யாத்துவண்ணம் கிராமத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது, அவரை தூரத்தில் நோட்டமிட மர்ம நபர்கள் அந்த வழியில் உள்ள விவசாய நிலத்திற்கு அருகில் பார்த்தசாரதியை வழிமறித்து கை, கால், மற்றும் தலை ஆகிய பகுதிகளில் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கொலை சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து, கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி உடலை எடுக்க விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர் குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக அறிவித்த உறுதிமொழி ஏற்றுப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
அண்மைச் செய்தி: ‘‘மத்திய அரசு ஆளுநருக்குப் புத்திமதி கூற வேண்டும்’ – டி.ஆர்.பாலு எம்.பி’
இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பார்த்தசாரதியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம் பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திலிருந்து தடயங்களை போலீசார் சேகரித்துள்ளனர். முன்விரோதம் காரணமாகக் கொலை நடைபெற்றதா? அல்லது வேறு காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணங்களில் போலீசார் தற்போது தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.