60வது பிறந்த நாளையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உக்ர ரத சாந்தி ஹோமம் செய்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பக்தர் மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்து மீண்டும் உயிர்பிக்க செய்த ஆலயம் என்பதால் இங்கு வருடம் முழுவதும் பூரண ஆயுளுடன் சுபிச்சமாக வாழ ஹோமங்கள் மற்றும் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். 
ஆண்டு முழுவதும் இங்கே 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி ஹோமம், 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி ,70 வயதில் பீமரத சாந்தி ,80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது பூர்த்தி அடைந்தவர்கள் கனகாபிஷேகம், நூறு வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணா அபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை பிரார்த்தனை செய்வது வழக்கம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு நட்சத்திர ரீதியாக 59 வயது முடிந்து இன்று 60வது வயது தொடங்குகிறது. இதையொட்டி, சிறப்பு வாய்ந்த அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு, டிடிவி தினகரன் தனது குடும்பத்தினருடன் சென்றார். கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார். நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்ற உக்ர ரத சாந்தி ஹோமத்தில் 64 கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து கோபுர கலசங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் டிடிவி தினகரன் தம்பதியினருக்கு தெளிக்கப்பட்டது. பின்னர் டிடிவி தினகரன் தம்பதி இருவரும் மாலை மாற்றிக் கொண்டு அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தனர். இந்த நிகழ்வில் டிடிவி தினகரன் மகள் ஜெயஹாரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.







