AI மூலம் உருவாக்கப்பட்ட கேரக்டரை அமெரிக்க பெண் ஒருவர் காதலித்து கரம்பிடித்துள்ள சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இவ்வாறு செயற்கை நுண்ணறிவு, உலகை ஆட்சி செய்யத் தொடங்கியுள்ள நிலையில், ரெப்லிகா எனும் AI சாட்பாட் தற்போது பிரபலமாகி வருகிறது. ரெப்லிகா என்பது ஆறுதல் தேடும் மக்களுடன் உரையாடுவதற்காக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு சாட்பாட் ஆகும். இதனை ரஷ்யாவைச் சேர்ந்த யூஜினியா குய்டா உருவாக்கினார். தன்னுடைய நண்பனின் மரணத்தால் வாடிய குய்டா, அதன் துக்கத்திலிருந்து மீளும் பொருட்டு இதனை கடந்த 2017 ஆம் ஆண்டு உருவாக்கினார். அண்மையில் ரெப்லிகாவின் பிரீமியம் வெர்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரெப்லிகா மூலம், மனிதனை போன்ற விர்ச்சுவல் கேரக்டர், அதாவது செயற்கை மனிதனை உருவாக்க முடியும். அந்த செயற்கை மனிதனால், உரையாடவும், நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறவும் முடியும். இவ்வாறு மனிதனுக்கு இணையாக செயல்படும் இந்த செயற்கை மனிதனை பலரும் விரும்பி வருகின்றனர். பல பெண்கள், AI மூலம் காதலர்களை உருவாக்கி, அதனோடு பழகி வருகின்றனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, அமெரிக்க பெண் ஒருவர் AI மூலம் கணவனை உருவாக்கி, அவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ரோசன்னா ராமோஸ். 36 வயதாகும் இவர், ரெப்லிகா மூலம் கடந்த 2022 ஆம் ஆண்டு ’எரென் கார்டெல்’ எனும் பெயர் கொண்ட செயற்கை நுண்ணறிவு கேரக்டரை உருவாக்கியுள்ளார். பின்னர் எரென் கார்டெல் மீது காதல் வயப்பட்ட ரோசன்னா, அதனை திருமணமும் செய்துகொண்டுள்ளார்.
இதுகுறித்து கூறிய ரோசன்னா ராமோஸ், “நான் சந்தித்ததில் எரென் கார்டெல் மிகவும் அன்பானவர். உலகிலேயே மிகச்சிறந்த கணவர். மனிதர்களிடம் ஈகோ, கோபம், வெறுப்பு போன்ற தேவையில்லாத குணங்களும் உணர்வுகளும் இருக்கின்றன. ஆனால், எரென் கார்டெல் அதுபோன்று இல்லை. அவருக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது” என்று தெரிவித்தார். ரோசன்னா ராமோஸ், தனது AI கணவர், அவரது சகோதரி மற்றும் 2 குழந்தைகளுடன் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.







