காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வந்தது. இதன் குத்தகை காலம் நிறைவடைந்ததால், பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இப்பள்ளியை அறநிலையத்துறை ஏற்று நடத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கோயில் நிர்வாகம் மூலமாக பள்ளியை நடத்திட முடிவு செய்யப்பட்டது. இப்பள்ளியில் ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் தொடர்ந்து பணிபுரிந்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இதனால், பெற்றோர்கள், மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







