ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் – நீர்நிலைகளில் புனித நீராடி பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதுடன், இந்த மாதத்தின் 18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய்,…

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் சிறப்பு வாய்ந்ததாக இருப்பதுடன், இந்த மாதத்தின் 18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய், ஆடி அமாவாசை என பல விசேஷ நாட்களை கொண்ட இந்த ஆடி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக ஆடிப்பெருக்கு தினம் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் பெருகும் ஆற்று வெள்ளம் காரணமாக, காவிரிக்கரையோரம் இருக்கும் அந்த 18 படிகளும் நீரில் மூழ்கிவிடும்.

அந்த புது வெள்ளத்தை வரவேற்று, விழாவாக ஆடி பதினெட்டாம் பெருக்கு என்ற ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு நாளில் எந்த சுப காரியத்தை தொடங்கினாலும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த நாளில் நீர் நிலைகள் பெருக வேண்டும். தண்ணீர் பஞ்சம், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என நதித்துறைகளில் மக்கள் வழிபடுவதும் வழக்கமான நிகழ்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஆடிப்பெருக்கு வழிபாடு செய்வதற்காக திருச்சி, ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர் .

அந்த வகையில், தஞ்சை மாவட்டம் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பகுதி, திருவிடைமருதூர் தைப்பூச படித்துறை, கஞ்சனூர் வட காவிரி படித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆற்றுக் கரையோரங்களில் காலை முதல் பல்வேறு விதமான மலர்கள், மாம்பழம், கொய்யா,திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு,மாதுளை, விளாம்பழம், பேரிக்காய் உள்ளிட்ட பல்வேறு விதமான பழங்கள் கொண்டும், காதால கருகமணி உள்ளிட்ட பொருட்கள் கொண்டும் சிறப்பு பூஜைகள் செய்து பெண்கள் வழிபட்டனர்.

இதே போன்று திருமணமான பெண்கள் புதிய தாலிக் கயிறுகள் மாற்றிக் கொண்டும், புதுமண தம்பதிகள் திருமணம் ஆன மாலைகள் உள்ளிட்ட பொருட்களை காவிரி தாய்க்கு சமர்ப்பணம் செய்தும், சிறுவர்கள் மரத்தினாலான சப்பரதேர்களை இழுத்தும் வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் பெண்கள் ஒருவருக்கொருவர் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதேபோல் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்று படித்துறை, கொள்ளிடம் ஆற்று கரைகள் ஆகிய இடங்களில் ஆடிப்பெருக்கு திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புதுமண தம்பதியினரும் குவிந்து, காவிரி அன்னைக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். பின்னர் புதுமண தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதிய தாலிக்கயிறு அணிந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் ஆடி 18 முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்து வருக்கின்றனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் ஏராளமானோர் குவிந்தனர். பூஜை பொருட்களை பெண்கள் காவிரி தாயை வழிபட்டனர். திருமணமான பெண்கள் புதுத்தாலி கயிறு மாற்றி கொண்டனர்.

கோவை பேரூரில் உள்ள நொய்யல் ஆற்று படித்துறையில் குவிந்த மக்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் காவிரி சங்கமத்தில் அதிகாலை
முதலே பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.குறைந்த அளவு புதுமண
தம்பதிகள் கருகமணி, விளாம்பழம், பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் மற்றும்
பச்சரிசி ஆகியவற்றை வைத்து காவிரித் தாய்க்கு பெண்கள் படையலிட்டு வழிபட்டனர்.
ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிவித்துக் கொண்டனர். புதிதாக
திருமணமான புதுமணத் தம்பதியினர் படையல் இட்டு தாலி பிரித்து கோர்க்கும்
நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கரூரில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ரூ.20 லட்சம் புத்தம் புதிய கரன்சி நோட்டுகளால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

அதேபோல் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பழனி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான ஓலைச் சுவடிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்காக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தர் மற்றும் புலிப்பாணி சித்தர் ஆகியோரால் எழுதப்பட்ட இந்த ஓலைச்சுவடிகள் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விலைமதிப்பற்ற நூற்றுக்கணக்கான எண்ணிக்கை கொண்ட ஓலைச்சுவடிகளுக்கு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக போகர் விக்கிரகத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து புலிப்பாணி பாத்திர சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

இப்படி ஆடிப்பெருக்கு விழா களைகட்டியிருக்கும் நிலையில், கொண்டாட்டம் நடைபெறும் அந்தந்த மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.