”பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு” – கனிமொழி எம்பியின் கேள்விக்கு மத்திய அரசு பதில்..!

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கனிமொழி எம்பி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி, மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி குன்வர் டேனிஷ்…

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக கனிமொழி எம்பி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி, மதச்சார்பற்ற ஜனதா தள எம்பி குன்வர் டேனிஷ் அலி, சிவசேனா எம்பி அரவிந்த் கண்பத் சவந்த் ஆகியோர் நாடு முழுதும் காணாமல் போன பெண்கள் பட்டியல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான முக்கியமான கேள்விகளை நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி எழுத்து மூலம்  எழுப்பியிருந்தார்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பெண்கள், சிறுமிகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் பெரிய அளவில் அதிகரித்துள்ளன என்பது உண்மையா?அப்படியானால், அதன் விவரங்கள், மாநில வாரியாக என்ன? காணாமல் போன மற்றும் மீட்கப்பட்ட அத்தகைய பெண்கள் மற்றும் சிறுமிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

குறிப்பிட்ட காலத்தில், மாநில வாரியாக எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன பெண்கள், சிறுமிகளின் எண்ணிக்கை எவ்வளவு.? இவர்களில் 18 வயது, மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட  சிறுமிகள் எத்தனை பேர்?

பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை வலுப்படுத்த ஏதேனும் சட்டத் திருத்தங்கள் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? இது தொடர்பாக மத்திய அரசு எடுத்த மற்ற பயனுள்ள நடவடிக்கைகள் என்ன? பெண்கள், சிறுமிகள் கடத்தப்படும்போது மேற்கொள்ள வேண்டிய அவசர கால நடவடிக்கைகள் என்ன?” ஆகிய கேள்விகளை  கனிமொழி எம்பி உள்ளிட்ட எம்பிக்கள் எழுப்பியிருந்தனர்.

இந்தக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது..

“தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) ‘இந்தியாவில் குற்றங்கள்’ என்ற வெளியீட்டில் குற்றங்கள் பற்றிய புள்ளிவிவர தரவுகள் இருக்கின்றன. காணாமல் போன பெண்கள், காணாமல் போன சிறுமிகள், மீட்கப்பட்டவர்கள், இன்னமும் மீட்கப்படாதவர்கள் குறித்தான மாநிலம் தழுவிய விவரங்கள் 2016 ஆம் ஆண்டு முதல் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் கடைசி வெளியீடு 2021 இல் வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் மாவட்டவாரியாக காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை தொடர்பான விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. 2017 முதல் இந்த விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சேகரிக்கத் தொடங்கியது.

இதன்படி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன சிறுமிகள் (18 வயதுக்கு குறைந்தோர்) எண்ணிக்கை 2017ல் 75பேர், 2018ல் 90பேர், 2019ல் 88பேர், 2020ல் 112 பேர், 2021ல் 144பேர் என அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை 2017ல் 191பேர், 2018 ஆம் ஆண்டில் 195பேர், 2019ல் 167பேர், 2020 ஆம் ஆண்டில் 224பேர், மேலும் 2021 ஆம் ஆண்டில் 369 என அதிகரித்திருக்கிறது.

போலீஸ் மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை அரசியல் அமைப்பின் ஏழாவது அட்டவணையில் மாநில அரசுகளின் பொறுப்பில் வருகின்றன. சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதும், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புலனாய்வு மற்றும் வழக்கு நடத்துவதும் மாநில அரசுகளின் பணியாக இருக்கிறது.

குற்றவியல் நீதி முறையை வலிமைப்படுத்தும் விதமாக புதிய சட்டங்களை இயற்றுதல், ஏற்கனவே இருக்கும் சட்டங்களை திருத்தி வலிமைப்படுத்துதல் ஆகியவை ஓர் தொடர் நடவடிக்கையாக அரசாங்கத்தால் அந்தந்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்திய அரசு குற்றவியல் சட்டங்களின் ஆய்வு, குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் முதலியன பற்றி ஆராய அனைத்து தரப்பினரின் ஆலோசனையோடு ஏற்கனவே ஒரு விரிவான செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா முழுமைக்கும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்களுக்கான அவசர கால உதவிப் பொறிமுறையின்படி சர்வதேச அங்கீகாரம் பெற்ற எண் 112 அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான அவசர நிலைகளில் இருந்தும் பெண்களுக்கு உதவி செய்வதற்கான கணினி அடிப்படையில் இந்த பொறிமுறை நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான உதவி அமையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வது பற்றி அறிவுரைகளை ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவை உள்துறை அமைச்சக https://www.mha.gov.in. இணையதளத்தில் கிடைக்கின்றன.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையும் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் காணாமல் போன வழக்குகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP)களை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. காவல்துறை, குழந்தைகள் நலக் குழுக்கள் மற்றும் சிறார் சீர்திருத்த வாரியம் ஆகியவற்றுக்கு காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது மீட்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகளைக் கையாள்வதற்கு உதவி, காணாமல் போன குழந்தைகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் தொடர்பாக சேவைகளை இயக்கி வருகிறது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்.

இதற்காக ஹெல்ப்லைன் எண். 1098 என்பது 24/7 செயல்படுகிறது. இது தவிர ரயில்வே குழந்தை பாதுகாப்பு உதவி (Railway Child Line) என்ற திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. முக்கியமான ரயில் நிலையங்களில் உதவி தேவைப்படும் குழந்தைகளுக்காக இது இயக்கப்படுகிறது. மேலும், ‘Track Child Portal’ என்ற திட்டத்தையும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தொடங்கியுள்ளது. காணாமல் போகும் குழந்தைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது. இந்த திட்டத்தின் கீழ், காவல் நிலையங்கள், சிறார் நீதி வாரியங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு லாகின் வழங்கப்பட்டுள்ளன, இதன் மூலம் அவர்கள் காணாமல் போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை போர்ட்டலில் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும்.

மேலும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒன் ஸ்டாப் சென்டர்’ என்ற திட்டத்தையும் நாடு முழுதும் நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பெண்கள் தனி இடங்களிலோ, பொது இடங்களிலோ வன்முறையால் பாதிக்கப்பட்டால் உடனடி மற்றும் சாதாரண உதவிகளை இந்த மையங்கள் செய்யும். போலீஸ், மருத்துவம், சட்டம் சார்ந்த ஒருங்கிணைக்கப்பட்ட உதவிகளை இந்த ஒன் ஸ்டாப் சென்டர்கள் மூலம் பெறமுடியும். மேலும் வன்முறைக்கு எதிரான போராட்டத்துக்கான உளவியல் ஆலோசனையும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது” என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.