மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக 11-வது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவைக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பி வருகின்றன. இதனால், அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில் அவையில் கண்ணியத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே மீண்டும் அவைக்கு வருவேன் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் அவை நடவடிக்கையில் பங்கேற்காமல் அவர் புறக்கணித்தார்.
தொடர்ந்து, மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் கோரிக்கை வைத்ததால் 11-வது நாளாக பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய கூட்டம் தொடங்கியவுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் அவைக்கு வந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, திமுக எம்பி கனிமொழி, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் அவைக்கு மீண்டும் வருமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.




