முக்கியச் செய்திகள் மழை

மழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும்; ககன்தீப் சிங் பேடி

சென்னை மாநகரில் தேங்கியுள்ள மழை நீர் முழுவதும் இன்று மாலைக்குள் அகற்றப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தொடர்மழையால் சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப்பணிகள் தொடர்பாக, ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் பேசுகையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும், மழைநீர் அகற்றப்பட்டதாகவும், மீதமுள்ள 93 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரும் இன்று மாலைக்குள் அகற்றப்படும் என உறுதிக்கூறினார்.

மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் கொசுக்களின் உற்பத்தியை தடுக்க, கொசு மருந்துகள் தெளிக்கும்பணி மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

“சென்னையில் கனமழையால் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற அதிக திறன் கொண்ட 620 மோட்டார்களை மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. மேலும் கூடுதலாக 20 மோட்டார் பம்புகள் வர உள்ளது. இன்று மாநகராட்சி சார்பாக 4,40,000 மதிய உணவு பொட்டலங்களும், மொத்தமாக 12,00,000 உணவு பொட்டலங்கள் இன்று கொடுக்க உள்ளோம்.

ஏற்கனவே பணியாற்றிவரும் மாநகராட்சி பணியாளர்களை தவிர்த்து தாற்காலிகமாக 500 பணியாளர்கள் நாளை வரவுள்ளனர். நாளை மாநகராட்சி பணியாளர்களுடன் சேர்ந்து பணியாற்றி மாஸ் கிளினிங் செய்ய உள்ளனர். நாளை மாலைக்குள் அனைத்தும் சீர் செய்ய திட்டமிட்டுள்ளோம்.

மாநகராட்சி சார்பாக 4,16,000 குளோரின் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. மேலும், நான்கு லட்சம் மாத்திரைகள் வர உள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் 15 மொபைல் மருத்துவ முகாம் நாளை நடத்தப்படும். கனமழை பெய்து நீர் தேங்கியுள்ளதால் உடனடியாக கொசுக்களின் உற்பத்தியை தடுக்க நாளை முதல் கொசு மருந்துகளை அளிக்க திட்டமிட்டுள்ளோம். அதில் 3,400 மாநகராட்சி பணியாளர்கள் நாளை முதல் கொசு மருந்து அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களில் 100 பழுதடைந்து சாலைகளை கண்டறிந்து சரிசெய்ய திட்டமிட்டோம் அதில் இன்று 70 பழுதடைந்த சாலைகள் சீர் செய்யப்பட்டது. மேலும், நாளை முதல் இந்த பணி தொடரும்” என தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி கடந்த 10 நாட்களில் 1330 பழுதடைந்த சாலைகள் சரி செய்யப்பட்டுள்ளதாகவும், அம்மா உணவகங்களில் வழங்கப்பட்ட இலவச உணவு வரும் ஞாயிறு வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இரவு 10 மணிவரை அம்மா உணவகத்தில் உணவு வழங்கப்படும் என தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 22 சுரங்கபாதைகளில் 18 சுரங்கபாதைகள் தண்ணீர்கள் அகற்றப்பட்டுள்ளது, மேலும் நாளை 4 சுரங்கபாதைகள் நீர் அகற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் எனவும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

டீசல் திருடியதாக ஓட்டுநர் மீது தாக்குதல்; வைரலாகும் வீடியோ

Saravana Kumar

கஜகஸ்தானில் துப்பாக்கிச் சூடு; போலீசார் உட்பட 5 பேர் உயிரிழப்பு

Saravana Kumar

துணைநிலை ஆளுநருக்குக் கூடுதல் அதிகாரம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்

Gayathri Venkatesan