கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 3-வது நாளாக இடைவிடாது கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணைகளில் இருந்து 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சுசீந்தரம், பரவசேரி, அரும நல்லூர் தாளக்குடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளநீரில் சிக்கித் தவித்த கிராம மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
பழைய ஆற்றில் வெள்ளம் கரை கடந்து ஓடுவதால் துண்டிக்கப்பட்ட கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கொழிபோர்விளை பகுதியில் 21 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக 2,000 ஏக்கர் பரப்பில் நடவு செய்யப்பட்டிருந்த நாற்றுகள் அனைத்தும் அழிந்து சேதமாகியுள்ளது.
சுசீந்திரம் அருகே பழைய ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மண் மூட்டைகளை கொண்டு அதனை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. மழை காரணமாக பால்வெட்டு தொழில் கடுமையாக பாதிபடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.







