சென்னையில் குளம் போல் மழை நீர் தேங்கிய குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியே வர முடியாத மக்களுக்கு, உணவு, மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்குவதற்காக ரிமோட் படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை சற்று ஓய்ந்தாலும் அதனால், ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கவில்லை. தாழ்வான பகுதிகளில் தேங்கி இருக்கக் கூடிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு சார்பில் கொடுக்கப்பட்ட தொலைபேசி உதவி எண்கள், காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண், தீயணைப்புத் துறை உதவி எண்களில் தொடர்பு கொள்ளும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. காவலர்களோ மழையால் பாதிக்கப்பட்டோருக்கு படகுகள் மூலம் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் தான் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும் நிவாரண உதவிகளைப் பெற முடியாமலும் தவித்து வருபவர்களுக்கு உதவுவதற்காகவே ஓவர்கிராப்ட் என்னும் ரிமோட் படகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Esteem எனும் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து ஓவர் கிராப்ட் எனும் ரிமோட் படகை காவல்துறையினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த படகை ரிமோட் மூலம் இயக்க முடியும். உணவு, மருந்து என 20 கிலோ எடை வரை பொருட்களை படகில் கொண்டு சென்று பாதிக்கப்பட்டோருக்கு வழங்கி உதவ முடியும் என கூறப்படுகிறது.
இது போன்று சென்னையில் காவல்துறை சார்பாக 6 ரிமோட் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சோதனை நடைபெற்றுள்ளதாகவும், சென்னையில் கன மழையால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை நவீன தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படகு சுமந்து சென்று சேர்க்கும் என்பது பலருக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Advertisement: