தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில், பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்கள் நல பணியாளர்களை நியமனம் செய்தது திமுக ஆட்சி என்றும், அவர்களை வீட்டுக்கு அனுப்பியது அதிமுக எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும், நீதிமன்றத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் வழக்கு தொடுத்துள்ளதாக கூறிய அவர், வழக்கின் தீர்ப்பிற்கு பின் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என்று உறுதிபட தெரிவித்தார். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்? என்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், அதிமுக தொடர்ந்து 10 வருடம் ஆட்சியில் இருந்தது. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்து முடித்து விட்டீர்களா? என கேள்வி எழுப்பினார்.
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த வாக்குறுதிகளை, உறுதி மொழிகளை, 10 மாத ஆட்சி காலத்தில் திமுக செய்த சாதனையை எந்த ஆட்சியும் செய்யவில்லை. திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.







