பிரசாந்த் நீல் இயக்கவுள்ள ஜூனியர் என்.டி.ஆர் ன் புதிய திரைப்படத்தில் வில்லியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில் இயக்குநர் மணிரத்தினத்தின் இருவர் திரைப்படம் மூலம் ஐஸ்வர்யா ராய் அறிமுகனார். பின்னர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். பாலிவுட் ன் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையான அளவில் இவரது திரைப்படங்கள் பெருவெற்றி பெற்றன.
அதை தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் ஆகிய படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அதில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார்.
இந்நிலையில், கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் சலார் படத்திற்குப் பின் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில், வில்லி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.








