”தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்த EDயிடம் Warrant உள்ளதா என முதலமைச்சர் கேட்டிருக்க வேண்டும்” என நியூஸ்7 தமிழ் கேள்வி நேரத்தில் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் செந்தில் பாலஜியின் கைது தொடர்பாக நடைபெற்ற கேள்வி நேர விவாதத்தின் போது பேசிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்ததாவது..
இந்திய தண்டனை சட்டத்தின் Schedule Offence எனபது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதன்படி எதுவெல்லாம் குற்றம், அந்த குற்றத்திற்கான தண்டனை என்ன என்பதை IPC சட்டம் விவரிக்கிறது. இதன்படி ஒரு குற்றம் நிகழ்ந்துவிட்டால் சிறிய குற்றம் எனில் உள்ளூர் காவல்துறையும், லஞ்ச விவகாரமாக இருந்தால் ஊழல் கண்காணிப்பு, பெரிய அளவிலான பண விவகாரமாக இருந்தால் CCB எனப்படும் மத்திய குற்றப்பிரிவு என இவர்களில் யார் ஒரு FIR பதிவு செய்தாலும் முதற்கட்ட விசாரணைக்கு பிறகு குற்றம் நடந்த பகுதியில் உள்ள நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்.
முன்னர் இருந்த FERA , FEMA போன்ற சட்டங்கள் தான் தற்போது சட்ட விரோத பண தடுப்பு சட்டம் PMLA மாற்றப்பட்டுள்ளது. இந்த PMLA சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு அம்சம் என்னவெனில் காவல்துறை FIR பதிவு செய்வது போல அமலாக்கத்துறையும் FIR பதிவு செய்து கொள்ளலாம். இதனை ECIR என அழைக்கிறார்கள்.
காவல்துறை பதிவு செய்யும் FIR என்பது ஒரு பொது ஆவணம், அதனை யார் வேண்டுமானாலும் அணுகலாம். ஆனால் அமலாக்கத்துறை பதிவு செய்யும் ECIR ஆவணத்தை யாரும் பார்க்க முடியாது அதனை பொதுவெளியில் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என அமலாக்கத்துறையின் சட்ட சரத்துக்கள் சொல்கின்றன. அதன்படி யார் மீது பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் அதனை உடனே சமர்பிக்க தேவையில்லை. அமலாக்கத்துறை எப்பொழுது சமர்பிக்க விரும்புகிறதோ அப்போது சமர்பிக்கலாம்.
அமலாக்கத்துறை ஒருவர் மீது குற்றம் சுமத்தி அவரது சொத்துக்களை முடக்கப் போகிறோம் என நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்பிக்கும்போதுதான் சம்பந்தப்பட்ட நபருக்கே ECIR ல் என்ன பதிவு செய்துள்ளது என தெரியவரும். FIR பதிவு செய்தால் முன்ஜாமின் மற்றும் ஜாமின் பெற முடியும் ஆனால் ECIR பதிவு செய்தால் முன்ஜாமீனோ , ஜாமீனோ பெற முடியாது. இவ்வளவு அளப்பரிய அதிகாரத்தை அமலாக்கத்துறை கொண்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 9 ஆண்டுகளில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் தலைவர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தை செய்பவர்கள் எல்லாம் எதிர் கட்சியினை சார்ந்தவர்கள் மட்டும்தான் என்ற அடிப்படையில் இந்த கைதுகள் நடைபெற்றுள்ளன.
PMLA வழக்கில் முக்கியமாக இடம்பெறும் குற்றம் கொலை, கொள்ளை போன்றவை அல்ல. பணப்பரிமாற்றம் மட்டும் தான். வருமான வரித்துறை சோதனை நடத்தி ஒரு FIR பதிவு செய்ததுடன் அதனை பயன்படுத்தி அமலாக்கத்துறை ECIR பதிவு செய்யும். அதன்படி அதிமுக ஆட்சிக்காலத்தில் மத்திய குற்றப் பிரிவால் செந்தில் பாலாஜி மீது FIR பதிவு செய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் இந்த வழக்கு வேகமெடுக்க ஆரம்பித்தது. இதனை அடிப்படையாக வைத்துதான் அமலாக்கத்துறை ECIR பதிவு செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஒரு அமைச்சராக பொறுப்பில் இருப்பவரை மேற்கு வங்கம், டெல்லி உட்பட பல மாநிலங்களில் அமலாக்கத்துறை நடத்தியதை போலத்தான் இந்த வழக்கிலும் நடத்தப்பட்டுள்ளது. அமைச்சரை பூட்டிய அறைக்குள் வைத்து விசாரணை நடத்திய போது திமுகவின் அமைப்புச் செயலாளர் செந்தில் பாலாஜியின் தரப்பு வழக்கறிஞராக வந்துள்ளேன் அவரை பார்க்க அனுமதியுங்கள் என கேட்டபோது கூட அனுமதிக்க மறுத்து விட்டார்கள். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி இந்த வழக்கு இரண்டு மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சோதனையின் போது எப்படி நடந்து கொண்டார், தற்போது எப்படி நடந்து கொண்டார் என்பதனை விரிவாக பேச வேண்டும். 8 வருடத்திற்கு முன்னால் பதிவு செய்த ஒரு வழக்கு, அமைச்சரின் வீடு உள்ளிட்ட அவரது அலுவலங்களில் எல்லாம் சோதனை நடைபெறுகிறது. ஆனால் ஒரு மாநிலத்தின் ஆன்மாவாக கருதப்படும் தலைமைச் செயலகத்தில் போகலாமா என்பது குறித்து அமலாக்கத்துறை குறைந்தபட்சம் யோசிக்க வேண்டாமா..?
சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு உரிமை உள்ளது என அமலாக்கத்துறை சொல்லுமேயானால் மாஜிஸ்திரேட்டிடம் பெறப்பட்ட அனுமதியில் தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நடத்துவோம் என குறிப்பிட்டு அந்த உத்தரவு வாங்கப்பட்டதா.. ? அப்படி வாங்கவில்லை எனில் முதலமைச்சர் நேற்று நடந்து கொண்ட விதம் தவறு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழக்கமாக 1 மணி அல்லது 1:10 க்கு கோட்டையில் இருந்து கிளம்புவார். ஆனால் ஜூன் 13ம் தேதி வழக்கத்திற்கு மாறாக 11:30 க்கே தர்ம சங்கடத்தை தவிர்ப்பதற்காக கோட்டையில் இருந்து கிளம்பிவிட்டார். ஒரு ஆளுமையுள்ள முதலமைச்சராக இருக்கும் முதலமைச்சர் அமலாக்கத்துறையிடம் தலைமைச் செயலகத்திற்குள் சோதனை நடத்த, குறிப்பாக கோட்டையில் உள்ள செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நடத்த உங்களுக்கு உத்தரவு உள்ளதா என கேட்டிருக்க வேண்டும்.
இதனை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டாரா என தெரியவில்லை. ஒரு வேளை அமலாக்கத்துறையின் சோதனை உத்தரவில் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தலாம் என்கிற வார்த்தை இல்லையெனில் அமலாக்கத்துறையை தலைமைச் செயலகத்திற்குள் அனுமதித்தது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய அரசியல் தவறு.
ஒருவேளை அமலாக்கத்துறையின் உத்தரவில் தலைமைச் செயலகம் என்கிற வார்த்தை இல்லாத போது அவர்களை கோட்டைக்குள் அனுமதிக்காமல் நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவு வாங்கி வாருங்கள் என திருப்பி அனுப்பியிருந்தால் அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை அளித்திருக்கும் ” என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
-யாழன்







