கோவையில் உணவகத்தில் சாப்பிட சென்ற ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.45 லட்சத்தை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஈஸ்வரமூர்த்தி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஈஸ்வரமூர்த்தி தனது தொழில் தொடர்பாக அடிக்கடி பணம் மற்றும் ஆவணங்களை காரில் எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்தநிலையில் நேற்று கண்ணன் என்ற நபருக்கு கொடுப்பதற்காக காரில் ஆவணங்களுடன் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். நேற்று இரவு 8.30 மணி அளவில் அவிநாசி சாலை சித்ரா பகுதியில் உள்ள அன்னபூர்ணா உணவகத்தின் அருகில் சாலையோரம் தனது காரை நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்காக உணவகத்திற்குள் சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் ஈஸ்வர மூர்த்தியின் கார் கண்ணாடியை உடைத்து, காரில் வைத்திருந்த ரூ.45 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து தனது காரை பார்த்த ஈஸ்வரமூர்த்தி கார் கண்ணாடி உடைக்கபட்டிருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக பீளமேடு போலீசில் புகார் அளித்தன் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் காவல் ஆய்வாளர் மரியமுத்து தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், திட்டமிட்டு காரை பின்தொடர்ந்து வந்து பணம் கொள்ளையடிக்கபட்டதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







