“துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது” – டிடிவி தினகரன் பேட்டி!

எடப்பாடி பழனிசாமி தான் திமுக வெற்றிக்கான ரகசியம் என உதயநிதி சொன்னது உண்மை தான் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “அமமுக அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும் உழைக்கும் இயக்கம். தேவர் பெயர் மதுரை விமான நிலையத்துக்கு சூட்டப்பட வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்னர் வாக்குறுதியாக சொல்லியுள்ளேன். இந்த நேரத்தில் நயவஞ்சகமாக எடப்பாடி பழனிசாமி வன்னியர் உள் ஒதுக்கீடு அரசியல் காரணமாக தென் தமிழகத்தில் சமூக அமைதி கெட்டது. அதனடிப்படையில் நான் சொன்ன கருத்தை தவறாக புரிந்து கொண்டு சிலர் தூண்டப்பட்டு செயல்பட்டுள்ளார்கள்.

தேர்தல் வெற்றிக்கு அப்பாற்பட்டு சமரசம் இன்றி தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எடப்பாடி பழனிசாமி இது பற்றி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து நிறைவேற்ற வேண்டும். அதை வைத்து எடப்பாடி அரசியல் செய்கிறார் என்று தான் சொன்னேன். நயினார் நாகேந்திரன் மீது எனக்கு தனிப்பட்ட கோபமில்லை. ஓபிஎஸ் விவகாரத்தில் அவர் நடந்து கொண்டது பிடிக்கவில்லை. நல்ல நண்பராக அவர் என்றும் என்னை சந்திக்கலாம்.

பழனிசாமி தான் தங்களது வெற்றியின் ரகசியம் என உதயநிதி சொன்னதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். உதயநிதி உண்மையை சொல்லியிருக்கிறார். துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது. மற்ற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட பாஜக தமிழ்நாட்டில் எது தேவையென்பதை உணர வேண்டும். தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு பழனிசாமி என்ற ஒற்றை மனிதருக்கு காவடி தூக்குபவர்கள், அம்மாவுக்கு கோவில் கட்டியவர்களை தான் அம்மா ஆன்மா சும்மா
விடாது.

செங்கோட்டையனை தனிப்பட்ட வேறொரு காரணத்துக்காகவே ஜெயலலிதா நீக்கியிருந்தார். அதற்கு அரசியல் காரணம் அல்ல. செங்கோட்டையன் உள்ளிட்ட யார் எடுக்கிற முயற்சியும் நடக்காது என்பது எனக்கு தெரியும். பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டா கனியாக தான் இருக்கும். எங்கள் வழி தனி வழி. நாங்கள் அமைக்கின்ற கூட்டணி தான் ஆட்சியில் அமர போகிற கூட்டணி” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.