தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு பொதுக்குழுவில் கிடைக்குமா என்ற கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானம் தயாரிக்கும் குழு இரண்டாம் கட்ட ஆலோசனைக் நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். எந்த மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தனர். ஆனால் திடீரென கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் வருவதாக தகவல் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலோசனை கூட்டமும் உடனடியாக முடிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “வரும் 18 தேதி ஆலோசனைக் கூட்டம் மறுபடியும் நடக்க உள்ளது. ஓபிஎஸ் வருகிறார் என்பதால் இந்த கூட்டம் முடிந்து செல்கிறோம் என்ற கருத்து தவறானது. அனைத்தும் பிரச்சினையும் சுமுகமாக முடியும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்தில் வருகை தந்தார். முன்னதாக தொண்டர்கள் எதிர்பார்க்கும் முடிவு பொதுக்குழுவில் கிடைக்குமா ? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “நிச்சயம் கிடைக்கும்” என ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
அதிமுக அலுவலகத்தில் ஒபிஎஸ்ஸுடன் வைத்திலிங்கம், செம்மலை, வைகைச்செல்வன், ஆர்.பி.உதயகுமார், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், தர்மர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தீர்மான நகலை கையில் வைத்திருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், ஒற்றை தலைமை குறித்து எந்தவித விவாதமும் நடைபெறவில்லை ஓபிஎஸ் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக செயற்குழு பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய தீர்மானம் குறித்து விவாதிக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.







