தமிழ்நாட்டில் காவல்துறை என்ற துறை இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுவதாக தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலத்தில் பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த அக்கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கடுமையான விமர்சனங்களை அவர் கூறினார். குறிப்பாக சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும், லாக்கப் மரணங்கள் குறித்து காட்டமான குற்றச்சாட்டுக்களை ஹெச்.ராஜா தெரிவித்தார்.
கடந்த ஓராண்டில் காவல் நிலையங்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஹெச்.ராஜா, சாத்தான்குளத்தில் காவல்நிலைய விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணமடைந்ததற்கு நீதிகேட்டு மெழுகுவர்த்தி ஏந்தி போராடிய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தற்போது எங்கே போய் உள்ளார் என கேள்வி எழுப்பினார். தற்போது நடைபெறும் லாக்கப் மரணங்களுக்கும் கனிமொழி கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஹெச்.ராஜா வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை என்று விமர்சித்த அவர், காவல்துறை என்று ஒரு துறை உள்ளதா என்கிற சந்தேகம் எழுவதாக காட்டமாகக் கூறினார்.







