அதிமுக போராட்டம் – மெரினா, வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை குவிப்பு

அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம், மெரினா உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.   தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி…

அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம், மெரினா உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என அவர்கள் அமளியில் ஈடுபட்டு முழக்கமிட்டதால், சபாநாயகர் அப்பாவு அவர்களை வெளியேற்றினார். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் இருந்து வெளியேறி சபாநாயகருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க சபாநாயகர் மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்திருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தளவாய் சுந்தரம், ஆதிராஜராம் உள்ளிட்டோர் நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஆனால் அதிமுக போராட்டத்திற்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்தது. இதனால், தடையை மீறி அதிமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மெரினாவில் போராட்டம் நடத்துவதாக தகவல் பரவியதையடுத்து, அங்கும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

காவல்துறையின் அனுமதியை மீறி அதிமுகவினர் போராட்டம் நடத்தவந்தால், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய காவல்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும் கைது செய்தவர்களை அழைத்துச் செல்ல பேருந்துகளும் தயார் படுத்தப்பட்டுள்ளன. அதிமுகவினரின் போராட்டம் எதிரொலியாக சென்னையில் முக்கிய இடங்களில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.