அதிமுகவில் விதிமீறல் ; தலைமையகத்தை எங்களிடம் தாருங்கள் – தொண்டர்கள் அரசுக்கு கடிதம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது முதல் தற்போது நடைபெற்றுள்ள நியமனங்கள் வரை அனைத்தும், அக்கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதால் கட்சி அலுவலகத்தை தொண்டர்களாகிய…

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது முதல் தற்போது நடைபெற்றுள்ள நியமனங்கள் வரை அனைத்தும், அக்கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதால் கட்சி அலுவலகத்தை தொண்டர்களாகிய எங்களிடம் ஒப்படையுங்கள் என இருவர்  தென் சென்னை வருவாய் கோட்டாட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்றது. அப்போது அதனை எதிர்த்து போராடி வரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் அதிமுக தலைமையகத்தை கைப்பற்றினர். ஓரே சொத்திற்கு இரு தரப்பினர் உரிமை கோருவதால் வருவாய்துறை அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இதுதொடர்பான விசாரணை வரும் 25ஆம் தேதியன்று அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தங்களது கருத்துகளையும் கேட்க வேண்டும் என  ராம்குமார் ஆதித்தன், கே.சி. சுரேன் பழனிசாமி ஆகியோர் வருவாய்துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்

அந்த கடிதத்தில், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை அலுவலகம் உரிமை கோருதல் சம்பந்தமாக வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணையில் தங்கள் முன்னிலையில் எங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தாங்கள் இருவரும் அதிமுக கட்சியில் 20 ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளோம். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அஇஅதிமுகவில் நியமிக்கப்பட்டுள்ள எந்தவொரு நியமனமும் செல்லாது. அவை கட்சியின் விதி எண் 20 க்கு எதிராக உள்ளது. அதாவது அஇஅதிமுகவில் பொதுச் செயலாளர் மறைந்துவிட்டால் அதன் பின்னர் பொதுக்குழு கூடி புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியாது. அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்துதான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு அடுத்த பொதுச்செயலாளர் தேர்வாகும் வரை, தலைமை கழக நிர்வாகிகள் வழி நடத்துவர். இந்த விதிமுறைகளை சசிகலாவை தொடர்ந்து ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என அனைவரும் புறந்தள்ளிவிட்டு தற்போது பதவியில் உள்ளனர் என அக்கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு அதிமுக கட்சியின் விதிமுறைப்படி புதிய உறுப்பினர்களை சேர்த்த பின்னர்தான் உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும். அவைகளையும் புறந்தள்ளிவிட்டு  ஒரே ஓட்டில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தனர். இதுதொடர்பான கடந்த டிசம்பர் மாதம் 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தோம். அதில் இருந்த தப்பிக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் மாவட்டச் செயலாளர்கள் மூலம கட்சியினருக்கு உறுப்பினர் அட்டை படிவம் வழங்கப்பட்டதாக கூறி தப்பிவிட்டனர். அதிலும் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு 21வயது நிரம்ப வேண்டிய ஒருவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டே 21 வயது நிரம்பியதாக குறிப்பிடபட்டிருந்தது.

இப்படி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள இருவரும், தங்களை விசாரணைக்கு அழைக்கும் பட்சத்தில் கடந்த 1972ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி ஏற்படுத்திய கட்சி விதிமுறைகள், கடந்த 1987ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதியன்று பதிவு செய்யப்பட்ட எம்.ஜி.ஆரின் உயில் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்ய தயாராகவுள்ளோம் என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் என ஒருவரை, எம்.ஜி.ஆர் வகுத்து தந்த கட்சி விதிமுறைகள்படி தேர்ந்தெடுக்கும் வரை தொண்டர்களாகிய தங்களிடம் தலைமை அலுவலக கட்டிடத்தை ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தங்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.