மாநில அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையேயான மோதல்கள், தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், இன்று வரை மாநில அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையே நடந்து வரும் பனிப்போர் குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்று ஒரு மாதம் கழித்து, திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அறிக்கையை அனுப்பும்படி, துறை செயலாளர்களுக்கும், தலைமைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பி முதல் சர்ச்சையை தொடங்கி வைத்தார்.
அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. ஆளுநரின் உத்தரவு வழக்கமான தகவல் பரிமாற்றம் தான் என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தலைமை செயலாளர் இறையன்பு.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டி, தமிழ்நாடு சட்டபேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. அத்தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர். இரண்டாவது முறை நீட் தேர்வு விலக்க மசோதா ஏன்? என விளக்கம் கேட்டார். மேலும், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ சேர்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என கூறினார்.
மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை மாநில அரசு எதிர்க்கிறது. புதிய கல்விக் கொள்கையில் உள்ள சில அம்சங்களை, பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு எட்டியுள்ளது. ஆனால் ஆளுநர் இந்தியை படிக்க வேண்டும். புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அமல்படுத்த வேண்டும் என மேடை தோறும் பேசி வருவதை, கல்வியாளர்கள் கூட ஏற்கவில்லை. கல்வி என்பது மாநில அரசின் உரிமை. கல்வியில் திணிப்பு கூடாது என கூறுகின்றனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள 6 பேர் விடுதலை தொடர்பான, சட்டப்பேரவையின் தீர்மானத்தில், ஆளுநர் செய்து வரும் தாமதம் குறித்து உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தவில்லை என்பதை, மனித உரிமை ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.
கால்நடைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாநில வளர்ச்சி நல்லதல்ல. அதனால் ஏற்றத்தாழ்வு உண்டாகும். மாநில ரீதியாக சிந்திக்காமல், இந்தியா என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார். அப்படியானால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் கடும் உழைப்பையும், தொலைநோக்குடன் கூடிய வளர்ச்சியையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறாரா என நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
((தருமபுரம் ஆதின பட்டின பிரவேச நிகழ்ச்சியில் ஆதினத்தை பல்லக்கில் சுமக்கும் நிகழ்வுக்கு முதலில் அரசு தடை விதித்தது. பிறகு தடை நீக்கப்பட்டது. அச்சமயத்தில் ஆதினத்திடம் ஆசி பெற்ற ஆளுநர், “தமிழ்நாடுதான் ஆன்மீக தலைநகரம் என்றார். இதுவும் சர்சையை கிளப்பியது.))
சபரிமலை ஐயப்பா சேவா சங்க விழாவில் பேசும்போது ‘‘சனாதன தர்மத்தில் உருவாக்கப்பட்டதே இந்தியா என்றதும், மற்றொரு விழாவில் குஜராத்தின் சோமநாதர் கோயில் சொத்துகள், காந்தகார், பெஷவராக முகம்மது கஜினியால் மாற்றப்பட்டதையும், அந்நகரங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியதை சனாதனத்தின் வலிமை என்றார். ஆப்கனில் அமெரிக்காவின் தலையீட்டை ஆளுநர் ஆதரிக்கிறாரா எனவும் கேள்விகளை எழுப்பினர் சமூக ஆர்வலர்கள்
அதே போல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தீவிரவாத இயக்கங்களுடன் ஒப்பிட்டு பேசினார். மதச்சார்பற்ற நாட்டில், மாநில ஆளூநர் என்ற உயர் பொறுப்பை வகிப்பவர் இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.
சில நாட்களுக்கு முன்பு திராவிடம் என்ற பெயரை வழங்கியது ஆங்கிலயேர்கள் எனறார் ஆளுநர் ரவி. அதற்கு பதிலளித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, விந்திய மலைக்குத் தெற்கே இருப்பவர்களைத் திராவிடர்கள் என்று முதன்முதலில் குறிப்பிட்டது இந்து சமய புராணங்கள் என்றார். மேலும் ஆதிசங்கரர், ‘திராவிட சிசு’ என்று திருஞானசம்பந்தரை அழைத்ததையும் நினைவுப்படுத்தினார்.
ஆளுநருடன் துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் சந்திப்பு என கல்வித் துறையிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. இப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என்கிறார் பல்கலைக்கழக இணை வேந்தரும் உயர் கல்வி அமைச்சருமான பொன்முடி.
உயர் கல்வித் துறைக்கு தெரிவிக்காமல், பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் உள்ள ஆளுநரும், துணை வேந்தரும் பட்டமளிப்பு விழா குறித்து அறிவிக்கின்றனர் என பொது வெளியில் கொதிக்கிறார். துறை அமைச்சருக்கும், துறையின் அதிகாரிகளுக்கும் தெரியாமல் பட்டமளிப்பு விழாவா என கல்வியாளர்கள் பதைபதைக்கின்றனர்
தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் படி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் நினைவூட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரசின் குரலுக்கு செவி சாய்ப்பாரா ஆளுநர்? பொறுத்திருந்து பார்க்கலாம்.








