தாய் மொழி கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்தில்தான் புதிய தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக 54வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த விழாவில் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மத்திய மீன்வளம், பால்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கௌரவ விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தமிழ் மொழியை உலகம் முழுவதிலும்
எடுத்துசென்றவர் பிரதமர் மோடி என எல்.முருகன் பெருமிதத்துடன் கூறினார். ஐநா சபையில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என கூறி பேச்சை தொடங்கியவர் மோடி எனக் கூறிய எல்.முருகன், வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் கவிஞர் பாரதியாரின் பெயரில் இருக்கை அமைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழ்மொழியின் பெருமையை பிரதமர் மோடி பரப்பிவருவதாக அவரது தமிழ் பற்று குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்தியாவின் இளைஞர்கள், வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் எண்ணம் எனவும் கொரோனா சவாலை கடந்து இந்தியா பொருளாதாரத்தில் மேம்பட்டு உள்ளதாவும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவர்களிடையே எல்.முருகன் எடுத்துரைத்தார். 8 ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியா எப்படி இருந்தது இப்போது
அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் கூறினார்.
உக்ரைன் போரின் போது அங்கு இருந்த இந்திய மாணவர்கள் 23 ஆயிரம் பேரை பத்திரமாக திரும்ப அழைத்து வந்தது, நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க மேக் இன் இந்தியா திட்டம் மூலம் தொழில்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தது, யோகாவை உலகம் முழுவதும் எடுத்துச்சென்றது என மத்திய பாஜக அரசின் சாதனைகள் பலவற்றை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் எடுத்துரைத்தார். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் இந்திய இளைஞர்கள் சிறந்து விளங்குவதாகக் கூறிய அவர், மாவட்டம் தோறும் விளையாட்டு திடல் அமைப்பது என்பது பிரதமரின் கனவு என பேசினார்.
தாய் மொழியில் மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகதான் புதிய தேசிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதிய தேசிய கல்வி கொள்கை முறையில் தான் தாய் மொழியில் எளிதாக மாணவர்கள் பாடங்களை கற்க முடியும் என்றார். தாய் மொழி கல்வியை ஊக்குவிக்கதான் புதிய தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டதாகவும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.
ஏற்கனவே தாம் அறிவித்தபடி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அந்த பல்கலைக்கழகத்தின் இணைவேந்தரும், தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி புறக்கணித்தார். பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் தமது பெயர் மூன்றாவதாக அச்சிடப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி பேட்டி அளித்த பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர் என்கிற முறையில் தமக்கு பட்டமளிப்பு விழாவில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனக் கூறி, விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.









