அமெரிக்காவில் இந்தியருக்கு 19 ஆண்டுகள் சிறை.. என்ன வழக்கு?

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர் நிகில் குப்தாவுக்கு 19 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

235 மாதங்கள் சிறைத் தண்டனை!

அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நவம்பர் 20 – வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த அமெரிக்க நீதிமன்றம், அவருக்கு 235 மாதங்கள் அதாவது 19 ஆண்டுகள் 7 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்தது. நீதிபதி விக்டர் மரேரோ இந்தத் தண்டனையை அறிவித்தார். முன்னதாக, தகுதிகாண் அதிகாரிகள் 144 மாதங்கள் சிறைத் தண்டனை பரிந்துரைத்திருந்தனர். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் 293 மாதங்கள் தண்டனை வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

கொலை செய்ய ரூ.89 லட்சம் பேரம்?

2023-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அமெரிக்கக் குற்றப்பத்திரிகையின்படி, இந்திய அரசு ஊழியர் ஒருவரின் அறிவுறுத்தலின்பேரில் பன்னுனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் நிகில் குப்தா ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அந்த அரசு ஊழியர் விகாஷ் யாதவ் என பின்னர் அடையாளம் காணப்பட்டார். நிகில் குப்தா, பன்னுனை கொலை செய்ய தொழில்முறை கொலையாளியை ஏற்பாடு செய்ய முயன்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்காக 1 லட்சம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.89 லட்சம்) வழங்க ஒப்புக்கொண்டதாகவும், முன்பணமாக 15,000 டாலர் (சுமார் ரூ.13 லட்சம்) வழங்கப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குப்தா தொடர்புகொண்ட நபர் உண்மையில் அமெரிக்க உளவுத்துறையின் தகவலாளராக இருந்தார். அவர் அறிமுகப்படுத்திய நபர், ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி என்பது விசாரணையில் தெரியவந்ததாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

நிகில் குப்தா 2023 ஜூன் மாதம் செக் குடியரசின் தலைநகர் பிராகாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் 2024 ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, நடப்பாண்டு பிப்ரவரி மாதம் கொலைக்கு ஏற்பாடு செய்தல், கொலைச் சதியில் ஈடுபடுதல் மற்றும் பணமோசடி சதி உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்த விவகாரத்தில் இந்திய அரசு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இதுபோன்ற நடவடிக்கைகள் அரசின் கொள்கைக்கு எதிரானவை என்றும் இந்தியா மறுத்துள்ளது.

கனடாவில் கொல்லப்பட்ட நிஜ்ஜார் வழக்குடனும் தொடர்பு!

இந்த வழக்கு கனடாவில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் வழக்குடனும் தொடர்புபடுத்தப்பட்டது. கடந்த 2023 ஜூன் மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சீக்கிய கோயிலுக்கு வெளியே துப்பாக்கியால் சுட்டு நிஜ்ஜார் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கொல்லப்பட்ட மறுநாளே, அவரும் கொலை செய்ய இலக்காக இருந்ததாக நிகில் குப்தா ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரியிடம் தெரிவித்ததாக அமெரிக்கக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசு முகவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியிருந்தது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. நிஜ்ஜாரை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தண்டனையைக் குறைக்கக் கோரிய நிகில் குப்தா!

நிகில் குப்தாவுக்கு ஏற்கெனவே எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை என்றும், அவர் தனது குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் கூறி அவரது வழக்கறிஞர்கள் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர். மேலும், 2023-ம் ஆண்டின் தொடக்கத்தில் கடுமையான மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக நிகில் குப்தா நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். விகாஷ் யாதவ் இந்திய அரசின் பிரதிநிதி என நம்பியதால், அவரது அழுத்தத்தைத் தன்னால் மறுக்க முடியவில்லை என்றும் பாதுகாப்புத் தரப்பு வாதிட்டது.

இதற்கிடையே, நீதிமன்ற விசாரணையின்போது ஆஜரான குர்பத்வந்த் சிங் பன்னுன், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது வெளிச்சத்துக்கு வந்ததிலிருந்து 1,200 நாட்களுக்கும் மேலாகத் தன்னால் வழக்கறிஞர் பணியைச் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். மேலும், கடந்த 2024-ம் ஆண்டு பன்னுன், தன்னைக் கொலை செய்யச் சதி செய்ததாகக் கூறி இந்திய அரசுக்கு எதிராகவும், சில தனிநபர்களுக்கு எதிராகவும் அமெரிக்காவில் சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.