பெரு நாட்டில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்!

தென் அமெரிக்க நாடான பெருவில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் லிமா உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு அவசரமாக வெளியேறினர்.

ஜூனின் மாகாணத்தில் நிலநடுக்கம்!

பெருவின் மத்தியப் பகுதியில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரை ஒட்டிய ஜூனின் (Junin) பிராந்தியத்தில் நவம்பர் 20 – வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) இதன் தீவிரம் 6.8 ரிக்டர் எனத் தெரிவித்துள்ளது.

பெரு புவி இயற்பியல் நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 129 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) நிலநடுக்கத்தின் அளவு 6.9 ரிக்டர் என்றும், அதன் மையம் ஜூனின் நகருக்கு வடக்கே 34 கி.மீ. தொலைவில் 108 கி.மீ. ஆழத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்!

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் லிமாவிலும் உணரப்பட்டன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மேலும், நிலநடுக்கம் ஏற்பட்டபோது பெரு நாடாளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களும் அவசரமாக வெளியேறினர். இதுதொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டன.

ஜூனின் மாகாணம் தலைநகர் லிமாவில் இருந்து சுமார் 320 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று அப்பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதி விசென்டே குயிஸ்பே (Vicente Quispe), உள்ளூர் வானொலியான RPP-யிடம் தெரிவித்துள்ளார். இந்தப் பகுதியில் இவ்வளவு அதிக தீவிரம் கொண்ட நிலநடுக்கம் உணரப்படுவது இதுவே முதல் முறை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுனாமி எச்சரிக்கை இல்லை!

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை, கண்காணிப்பு அல்லது அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், உயிரிழப்பு அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

நிலநடுக்க அபாயம் நிறைந்த ‘Ring of Fire’!

பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள ‘Ring of Fire’ எனப்படும் நெருப்பு வளையப் பகுதியில் பெரு அமைந்துள்ளது. சுமார் 40,000 கி.மீ. நீளமுள்ள இந்தப் பகுதியில் ஏராளமான எரிமலைகள் மற்றும் புவித்தட்டு பிளவுகள் உள்ளன. உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் சுமார் 90 சதவீதமும், செயல்பாட்டில் உள்ள எரிமலைகளில் சுமார் 75 சதவீதமும் இந்தப் பகுதியில் அமைந்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பெருவின் ஆண்டிஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் இருவர் காயமடைந்ததுடன், வீடுகள், சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகளும் சேதமடைந்தன. அதேபோல், ஜூலை மாதம் ஜூனின் பகுதியில் ஏற்பட்ட 5.5 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே, கடந்த செவ்வாய்கிழமை பெரு கடலோரப் பகுதியில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், அதைத் தொடர்ந்து 10 நிமிடங்களுக்குள் 4.8 ரிக்டர் அளவிலான நில அதிர்வும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.