மதுரை மாநகராட்சியில் சுமார் 200 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வரி முறைகேடு தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணையர் சுரேஷ்குமார், வரிவிதிப்புக் குழு தலைவரின் கணவர் கண்ணன், செந்தில்பாண்டியன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த முறைகேடு விவகாரத்தின் தொடர்ச்சியாக, மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களான வாசுகி, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, சுவிதா மற்றும் நகரமைப்பு குழு தலைவர் மூவேந்திரன், வரிவிதிப்பு குழு தலைவர் விஜயலட்சுமி ஆகிய ஏழு பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். வரி முறைகேடு வழக்கில் கைதான வரிவிதிப்புக் குழு தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரான பொன்வசந்தும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே, மதுரை மாநகராட்சி முறைகேடு தொடர்பாக அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் சொத்துவரி முறைகேட்டில் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறியும் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்றும் மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானாவில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.







