டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – 50% ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தல்!

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பினால் GRAP-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். இதனை கட்டுப்படுத்த செயற்கை மழையை வர வைக்கலாம் என்ற யோசனையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியில் முடிந்தது. அது பற்றிய மறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இதனிடையே டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் பனிப்போர்வை போர்த்தியது போல் காட்சி அளிக்கிறது. இதனால், காலையிலேயே வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்லும் நிலை உருவாகியுள்ளது. மேலும் பல பகுதிகளிலும் காலையிலேயே பனி மூட்டமும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பினால் GRAP-4 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து நாளை முதல் டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் அதிகபட்சமாக 50% பணியாளர்கள் மட்டுமே பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

டெல்லி பிராந்தியத்திற்குள் செயல்படும் அனைத்து தனியார் அலுவலகங்களும், தங்களின் மொத்த ஊழியர்களில் 50 சதவீதத்தினர் மட்டுமே பணியிடத்திற்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும். அனைத்து ஊழியர்களும் ஒரே நேரத்தில் வந்து செல்வது அவசியமில்லை என்றும் வருகை மற்றும் புறப்படும் நேரங்கள் படிப்படியாகப் பிரிக்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.