அதிமுக பொதுக்குழுவை முன்னிட்டு வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தங்களது பயணத்தை அமைத்துக் கொள்ளுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
பொதுக்குழு நிகழ்ச்சியையொட்டி கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையிலான சாலையில் அதிக வாகனங்கள் செல்லக்கூடும் என்பதால் போக்குவரத்து மெதுவாக செல்லவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே, வாகன ஓட்டிகள், பூந்தமல்லி முதல் கோயம்பேடு வரையிலான சாலையில் நாளை (11.07.2022) காலை 06.00 மணி முதல் மாலை 04.00 மணி வரையில், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம், தங்களது பயணங்களை முன்னேற்பாடாக மாற்றி அமைத்துக் கொள்ளவும், மாற்று பாதையில் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தில் கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் அதிமுகவினர் வாகனங்களை எடுத்துக் கொண்டு வந்ததால் சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக கிண்டியில் இருந்து போரூர் செல்லும் சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஸ்ரீவாரு கல்யாண மண்டபத்தை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து, இந்த முறை அவ்வாறு ஏற்படாமல் தடுப்பதற்காக இத்தகைய அறிவுறுத்தலை சென்னை போக்குவரத்து காவல் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) July 10, 2022








