இலங்கையில் என்ன நடக்கிறது என பார்ப்போம்: எஸ். ஜெய்சங்கர்

இலங்கையில் அடுத்து என்ன நடக்கிறது என பார்ப்போம் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நேற்று நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தை அடுத்து, அதிபர்…

இலங்கையில் அடுத்து என்ன நடக்கிறது என பார்ப்போம் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நேற்று நடைபெற்ற மாபெரும் மக்கள் போராட்டத்தை அடுத்து, அதிபர் பதவியை விட்டு விலக கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய ரணில் விக்ரமசிங்கவும் முன்வந்துள்ளனர்.

இலங்கையில் அனைத்துக் கட்சி அரசு அமைப்பது தொடர்பாக முடிவு எட்டப்பட்டுள்ளது.

வரும் 13ம் தேதி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய அறிவித்துள்ளார். புதிய அரசு பதவியேற்கும்போது, ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலகுவார்.

இலங்கையில் நேற்று ஏற்பட்ட தலைகீழ் மாற்றங்களை அடுத்து, இன்று கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கு இந்தியா ஆதரவாக இருப்பதாகவும், அந்நாட்டுக்கு எப்போதும் உதவி வருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்குத் தீர்வு காண அவர்கள் முயன்று வருகிறார்கள் என தெரிவித்துள்ள ஜெய்சங்கர், என்ன நடக்கிறது என பார்ப்போம் என கூறியுள்ளார்.

அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை எனும் இந்திய கொள்கையின்படி, இலங்கைக்கு இந்தியா அந்நாட்டு ரூபாய் மதிப்பின்படி ரூ. 1.27 லட்சம் கோடி கடன் வழங்கி இருப்பதும், இலங்கை மதிப்பில் ரூ.37 கோடி மதிப்பில் உதவிப் பொருட்கள் வழங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சீனா உடனான எல்லைப் பிரச்னை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், நமது உரிமையை விட்டுக்கொடுக்காமலும், இரு தரப்பும் ஏற்கும் வகையிலும் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிட்டார். இதுதான் தீர்வு; இதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாம் கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

தனது இளமைக் காலத்தில் இருந்த இந்தியாவைவிட தற்போதைய இந்தியா மிகவும் வித்தியாசமாக இருக்கிறது என தெரிவித்த ஜெய்சங்கர், சவால்களை எதிர்கொள்ளவும், பிரச்னைகளுக்குத் தீர்வை காணவுமான தகுதியை இந்தியா கொண்டிருப்பதாகக் கூறினார். நாடு இப்படி இருக்கும் என முன்பு யாரும் கற்பனை செய்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.