மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கு அதிமுக மற்றும் பாஜகதான் காரணம் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடி ரூபாய் நிதிப் பற்றாக்குறை உள்ளதாகக் தெரிவித்தார். மேலும், பாஜக தலைவர் அண்ணாமலை எல்லாவற்றிலும் பொய் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக தலைமையில் உள்ள கூட்டணி, 80% வெற்றியை பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தமிழ்நாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாக பணியாற்றி வருவதாக அவர் கூறினார். மேலும், தேர்தல் வாக்குறுதிகளை 75% நிறைவேற்றியுள்ளதாகவும், சட்டமன்ற தேர்தலில் கூறியது போல ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தினார் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அதிமுக அரசு 5 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை எனவும், அதனால் மக்களின் அடிப்படை பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதற்கு காரணம் அதிமுக மற்றும் பாஜகதான் என அவர் தெரிவித்தார். 5 லட்சம் கோடி நிதிபற்றாக்குறை தமிழகத்தில் உள்ளதாகவும், அடித்தட்டு மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது வெறும் 1000 ரூபாய் கொடுத்தது தான் அதிமுக என அவர் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இரண்டு தவணையாக 4000 ரூபாய் கொடுத்துள்ளது என தெரிவித்தார்.
மேலும், வைகோ உடல் நிலை குறித்த கேள்விக்கு, கொரோனா தொற்றுக்கு பிறகு அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து 10 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகள் சேமிக்கப்படும் விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இந்தப் பிரச்சனைக்கு ஒன்றிய அரசு நினைத்தால் தான் தீர்வு காண முடியும் எனவும், தற்போது ஒன்றிய அரசுடன் கூட்டணியில் இருப்பது யார்? இதனை, ஒன்றிய அரசுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக, பாஜகவிடம் தான் கேட்க வேண்டும் என அவர் கூறிய அவர், நீட் பிரச்சனை, இலங்கை பிரச்சனை, கூடங்குளம் அணு மின் நிலையம் உள்ளிட்ட பிரச்சனைகளில் மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதில் மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லை என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








