தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது எனவும், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் அதிமுக-பாஜக கூட்டணி இடையே கடந்த சில நாட்களாக பனிப்போர் நடந்து வருகிறது. பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தார். இதைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட பாஜக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தனர்.
இதையடுத்து சென்னையில் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக தொடர்ந்தால் மாநிலை தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனக் குறிப்பிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 
தொடர்ந்து மார்ச் 23ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் குறித்து அண்ணாமலை கூறியிருந்தார். இதையடுத்து கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அண்ணாமலை நாம் கூண்டு கிளி அல்ல. பறக்க நேரம் வந்து விட்டது என்று கூறியிருந்தார். இதனால் அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா என்பதில் சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளது பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ஆரம்பத்திலிருந்தே அதிமுக-பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது என்று கூறி வருகிறோம். ஈரோடு இடைத்தேர்தலிலும் பாஜக, அதிமுகவிற்கு ஆதரவளித்தது. வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.







