அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு 50 பேர் போட்டா போட்டி

அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு போட்டியிட போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே எழுந்துள்ள நிலையில் இரு பதவிக்கு கடும் போட்டிகள் நிலவுகின்றன. யார் யார் பந்தயத்தில் உள்ளனர்? என்ற கேள்வி…

அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு போட்டியிட போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே எழுந்துள்ள நிலையில் இரு பதவிக்கு கடும் போட்டிகள் நிலவுகின்றன. யார் யார் பந்தயத்தில் உள்ளனர்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் மேலோங்கியுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியிடமாகும் 57 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு வரும் ஜூன் 10 ஆம் தேதி நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6 காலியிடங்களில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் படி திமுக 4 இடங்களையும், அதிமுக 2 இடங்களையும் போட்டியின்றி கைப்பற்ற உள்ளன. திமுக சார்பில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு இடம் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் அதிமுகவில் உள்ள இரண்டு இடங்களுக்கு பலர் வாய்ப்பு கேட்பதால் அதிமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்களுக்கு பதவி எதுவும் இல்லாத நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை குறிவைத்து காய் நகர்த்த தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,சி.வி சண்முகம், ஆகியோர் முன்னணியில் உள்ளனர். இது தவிர ஜேசிடி பிரபாகர், செல்வராஜ், இன்பதுரை, சையதுகான், வேணுகோபாலும் தனக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். அதிமுக சார்பில் பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லாத சூழலில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதியும், கோகுல இந்திராவும் வாய்ப்பு கோரியுள்ளனர்.

இது தவிர சமுதாயம் சார்ந்து, கட்சி பிரிவுகள் சார்ந்து என சுமார் 50 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களின் விருப்பத்தை கட்சி தலைமையிடம் பதிவு செய்துள்ளனர்
ஏற்கனவே அதிமுக சார்பில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசனுக்கு வாய்ப்பு வழங்கியது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருந்தது. அதிமுகவில் பல்லாண்டு காலம் உழைத்துக் கொண்டிருக்கும் மூத்த நிர்வாகிகள் பலர் இருக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது தான் எதிர்ப்பு கிளம்ப காரணமாக இருந்தது.

அதே நேரத்தில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக இருக்கும் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகிய இருவரும் மாநில அரசியலுக்கு ஆசைப்பட்டு பதவிக்காலம் முடியும் முன்பே பதவி விலகியதும் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாத செம்மலைக்கு இந்த முறை ராஜ்யசபா உறுப்பினராக வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மற்றொரு இடம் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம், கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்படும் என தெரியவருகிறது. அதே நேரத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வன்னியர் உள் ஒதுக்கீடு காரணமாக தென்மாவட்டங்களில் அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதனை சரி படுத்தும் விதமாக தென்மாவட்டங்களில் இருந்தும் ஒருவர் ராஜ்யசபா தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகளவு நிலவுகிறது.

விக்னேஷ், நியூஸ் 7 தமிழ்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.